கோலசிலாங்கூர், ஜூன் 27 – நடந்து முடிந்த கோலசிலாங்கூர் பிகேஆர் கட்சி தொகுதித் தேர்தலில் நடப்பு சிலாங்கூர் மந்திரி புசாரான டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிம் எஸ்.மாணிக்கவாசகத்திடம் தோல்வி கண்டதைத் தொடர்ந்து அந்தத் தொகுதியில் நடத்தப்பட்ட தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை நடந்த இந்த தேர்தலுக்கான வாக்குகள் பிகேஆர் தலைமையகத்தில் அதிகாலையில் எண்ணப்பட்டன.
காலிட் இப்ராஹிமின் அரசியல் செயலாளர் அஸ்மான் அபிடின் இதனை தெரிவித்ததோடு. வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது டான்ஸ்ரீ காலிட் முன்னணியில் இருந்ததாகவும் ஆனால், அந்த நேரத்தில் திடீரென மின்சாரம் தடைப்பட்டதாகவும் கூறினார்.
ஏறத்தாழ இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் மின்சாரம் வந்தபோது 100 செல்லாத வாக்குகள் மாயமான முறையில் மாணிக்கவாசகத்திற்கு சாதகமாக விழுந்ததாக அவர் கூறினார்.
அதே வேளையில் தேசிய மின்சார இலாகாவுடன் தொடர்பு கொண்ட போது பிகேஆர் தலைமையகம் இருக்கும் பகுதியில் மின்தடை எதுவும் ஏற்படவில்லை என்று அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தத் தேர்தலில் 701 வாக்குகள் பெற்று மாணிக்கவாசகம் வெற்றி பெற்ற நிலையில் 515 வாக்குகள் பெற்று காலிட் இப்ராஹிம் தோல்வி அடைந்தார்.
ஆனால், இதே தேர்தலில் தேசியத் துணைத் தலைவர் பதவிக்கான வாக்குகள் எண்ணிக்கையில் அஸ்மின் அலியை விட காலிட் இப்ராஹிமுக்கு கூடுதலான வாக்குகள் கிடைத்தன.
மாணிக்கவாசகத்தின் அணியினர் கோலசிலாங்கூர் தொகுதியில் அனைத்து உயர் பதவிகளையும் கைப்பற்றியதோடு இளைஞர், மகளிர் பகுதி பொறுப்புகளையும் பெற்றுள்ளனர்.
இன்று தனது 49 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் மாணிக்கவாசகம், “இந்த வெற்றி எனக்கு கிடைத்த சிறந்த பிறந்த நாள் பரிசு” என்று கூறியுள்ளார்.
தனது வெற்றிக்கான காரணம் தொகுதி உறுப்பினர்கள் மாற்றத்தை விரும்பியதுதான் என்றும் மாணிக்கவாசகம் கூறினார்.
காலிட்டின் அரசியல் செயலாளர் அஸ்மான் கூறியுள்ள வாக்கு எண்ணிக்கை முறைகேடுகள் பற்றி கேட்ட போது, வாக்குகள் எண்ணப்படும் போது சம்பந்தப்பட்ட தேர்தல் பிரதிநிதிகள் அங்கு சாட்சிகளாக இருந்தனர் என்று மாணிக்கவாசகம் தெரிவித்தார்.
நாளை சிலாங்கூரிலும் சபாவிலும் மேலும் 16 பிகேஆர் தொகுதிகள் தங்களின் தேர்தல்களை நடத்தவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.