கோலாலம்பூர், ஜூன் 28 – மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த வருடத்தில், அதிக வேகத்துடன் வளர்ந்து வருவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
2014-ம் ஆண்டில், மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றப்பாதையில் பயணிப்பதாக உலக வங்கியின் பொருளாதார கண்காணிப்பு குழு அறிவித்துள்ளது.
குறிப்பாக, கடந்த 2013-ம் ஆண்டு 4.7 ஆக இருந்த பொருளாதார வளர்ச்சி வீதம், இந்த வருடத்தில் 5.4 ஆக உயர்ந்திருப்பது, மலேசிய அரசின் சிறப்பான பொருளாதார கொள்கைகளையே எடுத்துக்காட்டுகின்றது என தெரிவித்துள்ளது.
மேலும், இந்த பொருளாதார வளர்ச்சிக்கான காரணிகள் பற்றி உலக வங்கி கூறுகையில், “மலேசியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி மதிப்பு மற்றும் வெள்நாட்டு வர்த்தகம், முதல் இரு காலாண்டுகளில் குறிப்பிட தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. இதனால் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.
எனினும், இந்த வளர்ச்சி அடுத்துவரும் 2015-ம் ஆண்டு வரை தொடருமா என்பது குறித்து சந்தேகம் எழுப்பி உள்ளது. மலேசியா மக்களின் குடும்ப செலவீனங்கள் 86.5 சதவீத ஜிடிபி(GDP)-ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக , வட்டி விகிதமும் பன்மடங்கு உயருக்கூடம். இது மலேசியாவின் பொருளாதாரத்தை 4.6 சதவீதம் என்ற அளவில் குறைத்து விடும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.