பிரேசில், ஜூன் 29 – 2014ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணப் போட்டிகளில் இதுவரை நடைபெற்ற ஆட்டங்களிலேயே இதுதான் உச்சகட்டம் – இறுதி ஆட்டத்திற்கு நிகரான பரபரப்பு – என்று கூறுமளவுக்கு இருந்தது நேற்று நடைபெற்ற பிரேசில் – சிலி நாடுகளுக்கிடையிலான ஆட்டம்.
முதல் 16 நாடுகளில் ஒன்றாக தேர்வு பெற்று இரண்டாவது கட்டத்திற்கு முன்னேறிய பிரேசிலும் சிலியும் காற்பந்து உலகில் பிரபலமான தென் அமெரிக்க நாடுகள்.
அதிலும் பிரேசில் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.
காற்பந்து விளையாட்டை தேசிய விளையாட்டாகவும், தங்களின் உயிரின் ஓர் அங்கமாகவும் மதிக்கும் பிரேசிலியர்கள்,
இந்த ஆண்டு உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளை ஏற்று நடத்த முன்வந்த கணம் முதற்கொண்டே,
இந்த தடவையிலான போட்டியில் தாங்கள் வென்று உலகக் கிண்ணத்தை தங்கள் நாட்டின் மண்ணில் நிறுத்தி வைக்க வேண்டும் என்ற அறைகூவல்களும், ஆவல்களும், முன்னேற்பாடுகளும் தீவிரமாக பிரேசிலின் ஒவ்வொரு பகுதியிலும் அரங்கேறி வந்தன.
அவை அத்தனைக்கும் உலை வைக்கும் வகையில் நடந்தது நேற்றைய ஆட்டம்!
பினால்டி மூலம் வெற்றியைத் தீர்மானித்த ஆட்டம்
90 நிமிடங்களுக்கான ஆட்டத்தின்போது, பிரேசில் முதல் கோலை போட்டு முன்னணிக்கு வந்த சில நிமிடங்களிலேயே, சிலியும் ஒரு கோல் போட்டு ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டு வந்தது.
முழு ஆட்டமும் முடிவடைந்த நிலையிலும் 1-1 என்ற கோல் எண்ணிக்கை இருந்த காரணத்தால் பிரேசில் நாட்டு பயிற்சியாளர் ஷோலாரி பதட்டத்தின் உச்ச கட்டத்திற்கே போய்விட்டார்.
ஆட்டம் முடிவடையும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்த போது தொலைக்காட்சியின் படமெடுக்கும் கருவிகள் காட்டிய ஷோலாரியின் உடல் மொழிகள் – முக மொழிகள்,
அவரது பதட்டத்தையும், நடுக்கத்தையும் தெளிவாக எடுத்துக் காட்டின.
பதட்டத்தில் சைகை காட்டிக் கட்டளையிடும் பிரேசில் பயிற்சியாளர் ஷோலாரி…
பிரேசிலின் காற்பந்து உலகில் தந்தை ஸ்தானத்தில் வைத்துப் போற்றப்படும் 65 வயதான ஷோலாரிக்கும் தெரியும் – நடக்கும் ஆட்டத்தில் தனது அணி தோற்றால்,
அதுவும் இந்த சுற்றில் தோற்றால் – தன்னை கிழி கிழியென்று கிழித்துத் துவைத்துக் காயப்போட்டு விடுவார்கள் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். பிரேசிலின் தெருக்களில் கொஞ்ச நாளைக்கு நடமாடக் கூட முடியாத நிலைமையும் ஏற்பட்டிருக்கலாம்.
இத்தகைய சூழ்நிலையில்தான், கூடுதலாக வழங்கப்பட்ட அரை மணி நேரத்திலும் இரண்டு நாடுகளும் கோல் அடிக்க முடியாமல் திணற,
ஆட்டம், பினால்டி உதைகளின் மூலம் வெற்றியைத் தீர்மானிக்கும் கட்டத்திற்குப் போனது.
வெற்றியை பினால்டிகளின் மூலம் தீர்மானிக்கும் இத்தகைய நிலைமை எல்லா விளையாட்டாளர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் உச்சகட்ட பதட்டத்தைக் கொடுக்கும். எவ்வளவு பெரிய விளையாட்டாளரையும் நிலை தடுமாறச் செய்து விடும்.
அதுதான் நடந்தது, நேற்றைய பிரேசில் – சிலி ஆட்டத்தின் போதும்.
ஏமாற்றாத நெய்மார்
பிரேசில் நாட்டு முன்னணி விளையாட்டாளர் நெய்மார்…
பயிற்சியாளர் ஷோலாரி செய்த மிக முக்கியமான திருப்பமான மாற்றம் – பிரேசிலின் முன்னணி ஆட்டக்காரர் நெய்மாரை ஐந்தாவது பினால்டி பந்தை அடிப்பவராகத் தேர்ந்தெடுத்ததுதான்!
வழக்கமாக முன்னணி ஆட்டக்காரர்தான் பினால்டியில் முதல் கோலை அடிப்பார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் நெய்மாருக்கு இறுதி கோலை – ஐந்தாவது பினால்டியை அடிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.
அந்த முடிவுதான் – பிரேசிலின் வெற்றியைத் தீர்மானித்தது என்றால் மிகையில்லை.
பினால்டிகளிலும் இரண்டு தரப்பும் சரிசமமாக ஆளுக்கு 2 கோல்கள் போட்டு இருந்த நிலையில், எஞ்சியிருந்த ஒரே ஒரு பினால்டி வாய்ப்பை அற்புதமான கோலாக்கினார் நெய்மார்.
அவர் அந்த ஐந்தாவது பினால்டி பந்தை உதைக்க முன்வந்த போது பிரேசில் நாட்டு மொத்த மக்கள் தொகையுமே – கோடிக்கணக்கான உலக இரசிகர்களும் நெஞ்சில் கைவைத்துக்கொண்டே பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
பலரது இதயம் ஒரு கணம் துடிக்காமல் நின்றிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆனால், நெய்மார் தனது நாட்டு மக்களை – பிரேசிலுக்கு ஆதரவான காற்பந்து இரசிகர்களை ஏமாற்றவில்லை – அந்த ஐந்தாவது பினால்டியை கோலாக்கினார்.
ஆனால், அப்போது கூட, அரங்கில் ஆரவாரத்தை விட – அமைதியே கூடுதலாக ஆக்கிரமித்திருந்தது.
காரணம், சிலி நாட்டுக்கு இன்னும் ஒரு பினால்டி மிச்சமிருந்தது.
அதையும் சிலி நாட்டு விளையாட்டாளர் கோலாக்கியிருந்தால், நமது நகைச்சுவை நடிகர் வடிவேலு பாணியில் ‘மீண்டும் ஆரம்பத்திலிருந்து வருவோமா’ என்பதுபோல, மீண்டும், இரண்டு நாடுகளுக்கும் பினால்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டு ஆட்டம் நீண்டு கொண்டே போயிருக்கும்.
ஆனால், ஐந்தாவதாக சிலி நாட்டு விளையாட்டாளர் அடித்த பந்து, கோல் கம்பத்தின் மேல் முனையில் பட்டுத் தெறித்து கோல் ஆகாமல் எகிறி வெளியேற,
அதன் பின்னர்தான், அரங்கம் ஆர்ப்பரித்தது – தொலைக்காட்சி இரசிகர்களும் எகிறிக் குதித்து கும்மாளமிட்டனர்.
பிரேசில் நாட்டு மக்களுக்கு மீண்டும் உயிர் வந்தது.
ஸ்தம்பித்த இதயங்கள் மீண்டும் இயங்க ஆரம்பித்தன.
இனிவரும் ஆட்டங்கள் எப்படியோ தெரியாது!
ஆனால், நேற்றைய பிரேசில் – சிலி ஆட்டம் உலகக் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டியையே பார்த்துவிட்ட திருப்தியை ஒவ்வொரு காற்பந்து இரசிகனுக்கும் தந்தது.
-இரா.முத்தரசன்