இஸ்லாமாபாத், ஜூன் 30 – போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, இலங்கையில் ஊடுருவும் பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்த, பாகிஸ்தானியர்களுக்கான உடனடி விசா நடைமுறையை இலங்கை ரத்து செய்துள்ளது.
இலங்கை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ நினைக்கும் தலிபான் தீவிரவாதிகள் குறித்து அந்நாட்டு புலனாய்வுத்துறைக்கு சர்வதேச காவல்துறையான இண்டர்போல் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
போலி ஆவணங்களைக் காட்டி தலிபான் தீவிரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவி வருகின்றனர் என்றும், சட்ட விரோதமாக இலங்கையில் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அறிவுறுத்தப்பட்டது.
இது குறித்து இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி, பாகிஸ்தான் வெளியுறவுத் துறையிடம் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கிடையே இலங்கையில் அகதிகளாக உள்ள பாகிஸ்தானியர்களை நாடுகடத்த இலங்கை முன்வந்துள்ளதாக வந்த தகவல் குறித்து விளக்கம் அளிக்குமாறு அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பு, இலங்கையிடம் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து கொழும்புவில் உள்ள பாகிஸ்தான் தூதகரகம் மற்றும் இலங்கை குடியேறுதல் துறை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.