சென்னை, ஜூலை 1 – சென்னை அருகே நடந்த கட்டிட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் அடிக்கடி மழை பெய்வதாலும், ஒருங்கிணைப்பு இல்லாததாலும் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், உயிர் பலி அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. சென்னை அடுத்த போரூர் குன்றத்தூர் சாலையில் மவுலிவாக்கம் பாய் கடை பேருந்து நிலையம் உள்ளது.
இதன் அருகே மதுரையை சேர்ந்த மனோகரன் என்பவர், ‘டிரஸ்ட் ஹைட்ஸ்’ என்ற பெயரில் 11 மாடிகள் கொண்ட, இரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை அருகருகே கட்டி வந்தார்.
பிரைம் சிருஷ்டி என்ற நிறுவனத்தினர், இந்த கட்டிடத்துக்கான பணிகளை 2012-ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகின்றனர். இப்பணிகளில் சென்னை, சேலம், மதுரை மற்றும் ஆந்திரா, ஒடிசா, பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
குறிப்பாக ஆந்திராவை சேர்ந்தவர்கள் தான் இங்கு அதிகளவில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இவர்கள் அனைவரும் வேலையை முடித்துவிட்டு சம்பளம் வாங்குவதற்காக கட்டிடத்தில் காத்திருந்தனர். அப்போது அப்பகுதியில் திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சூறாவளி காற்றும் வீசியது.
இடி சத்தம் கேட்ட அடுத்த சில வினாடிகளிலேயே, மவுலிவாக்கம் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதை பொதுமக்கள் உணர்ந்தனர். இந்நிலையில், அப்பகுதியில் டிரஸ்ட் ஹைட்ஸ் நிறுவனம் கட்டி வந்த அந்த 11 மாடி கட்டிடம் மளமளவென சீட்டுக் கட்டு போல் சரிந்து விழுந்தது.
இந்த விபத்தில் இங்கு பணிபுரிந்த ஏராளமான தொழிலாளர்கள், இடிபாடுகளுக்கிடையே உயிருடன் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்த அடுத்த நிமிடங்களில், சென்னை மற்றும் பல பகுதிகளில் இருந்து மீட்பு குழுவினர் அங்கு வந்தனர்.
கடந்த 3 நாட்களாக, மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு துறைகளை சேர்ந்த 2,400-க்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்புக் குழுவினரின் தொடர் முயற்சிக்கு பின் நேற்று இரவு வரை 23 பேர் உயிருடனும், 19 பேர் சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளனர். உயிருடன் மீட்கப்பட்டவர்கள், உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் இதுவரை மொத்தம் 19 பேர் பலியாகியுள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இங்கு அடிக்கடி மழை பெய்து வருவதால், மீட்பு பணி மேலும் 3 நாட்கள் நீடிக்கும் என தெரிகிறது.
மழை பெய்யும் என்று தெரிந்தாலும், அதிகாரிகள் மீட்பு பணி நடைபெறும் பகுதியில் தார் பாய் அமைக்கவில்லை. மழை பெய்யும் நேரத்தில் மீட்பு பணியை நிறுத்தி விடுகின்றனர். மழை நின்ற பிறகுதான் பணிகளை தொடர்ந்து செய்கின்றனர்.
மேலும், மழை தண்ணீர், இடிபாடுகளுக்குள் சென்று விடுகிறது. இதனால் சிக்கியுள்ளவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இறந்திருப்பவர்களின் உடல்கள் இருக்கும் இடத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதால், உடல்கள் அழுகி, அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
அதிகாரிகள் அங்கு வாசனை திரவியம் மற்றும் பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றை தூவி வருகின்றனர். உடனடியாக தார்பாய் அமைத்து மழை தண்ணீர், இடிபாடுகளுக்குள் செல்லாமல் தடுத்தால்தான் உயிரோடு இருப்பவர்களை மீட்க முடியும் என்று கூறப்படுகிறது.
மேலும், இதுவரை 20 சதவீத மீட்பு பணிகள் மட்டுமே நடந்திருப்பதாகவும், மீட்பு பணியில் குறைபாடு இருப்பதாகவும், பணிகளை விரைவு படுத்த வேண்டும் என்று ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
மொத்தம் இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். இறந்த 19 பேரின் உடல்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
பரிசோதனை முடிந்த பிறகு அவரது உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு அரசு செலவிலேயே சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது.