Home நாடு காவல் துறைத்  படைத் தலைவருக்கு எதிராக இந்திராகாந்தி வழக்கு தொடுத்தார்

காவல் துறைத்  படைத் தலைவருக்கு எதிராக இந்திராகாந்தி வழக்கு தொடுத்தார்

553
0
SHARE
Ad

M. Indira Gandhi, a Hindu, center, with her children Karan, 11, left, and Tevi, 13, in an undated family photo.ஈப்போ, ஜூலை 1 – மதம் மாறிய தனது முன்னாள் கணவர் கே.பத்மநாதன் என்ற முகமட் ரிட்சுவான் அப்துல்லாவிடமிருந்து தனது மகளை மீட்டுத்தரக் கோரி மலேசியக் காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் மீது ஈப்போவைச் சேர்ந்த குடும்ப மாது எம்.இந்திராகாந்தி நேற்று ஈப்போ நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

தமது மகளை மீட்க நீதிமன்றம் காவல் துறை தலைவருக்கு ஆணையிட வேண்டும் என்றும் தனது முன்னாள் கணவரை கைது செய்து மகளை மீட்டுத் தர வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிக்கிறார்.

சிறுமி பிரசன்னாவை தாயாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும், இதுவரை சிறுமியைத் தாயாரிடம் ஒப்படைக்காமல் இருந்து வருகிறார் ரிட்சுவான்.

#TamilSchoolmychoice

நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிப்புச் செய்துள்ள ரிட்சுவான் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? ஜூன் 6ஆம் தேதிக்குள் பிரசன்னாவை தாயாரிடம் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பின் மூலம் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து போலீஸ் படை இதுவரை செயல்படாதது ஏன் என வழக்கறிஞர் குலசேகரன் வினவினார்.

போலீஸ் படைக்கு தலைமை ஏற்றுள்ள இவரிடத்தில் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது என்று கருதியதால் 30 நாட்களுக்குள் குழந்தையை என்னிடம் ஒப்படைப்பதில் தோல்வி கண்டிருப்பது குறித்து அவருக்கு எதிராக வழக்குத் தொடுக்க முடிவு செய்திருப்பதாக அவர் கூறினார்.

“கே.பத்மநாதனை கைது செய்ய மாட்டேன் மாறாக அவரை கண்காணிப்பேன் என்று ஐஜிபி கூறியிருப்பதன் மூலம் அவரது கடமையில் அவர் சரியாக செயல்படவில்லை என்பது தெளிவாகிறது. நீதிமன்றத்தின் உத்தரவை அலட்சியப்படுத்தும் வகையில் அவரது செயல்பாடு அமைந்துள்ளது” என்றும் குலசேகரன் மேலும் கூறினார்.

இதற்கிடையில்,  ஐஜிபியை நேரில் சந்திப்பதற்கு வெகு நேரம் புக்கிட் அமானில் காத்திருந்தேன், ஆனால் அவர் என்னை சந்திக்க வரவில்லை என்றும் வழக்கறிஞர் குலசேகரன் கூறியிருக்கின்றார்.

சிவநேசன் கருத்து

இதற்கிடையில் நாட்டின் போலீஸ் படைத் தலைவருக்கு எதிராக மாது ஒருவர் வழக்கு தொடுப்பது இதுவே முதல்முறை என்று வழக்கறிஞரும் சுங்கை ஜசெக சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசன் கூறினார். இந்திரா காந்தியின் சட்டப் போராட்டம் நியாயமானது என்பதால்தான் நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தவறியிருக்கும் அரசாங்க உயர் பதவியில் உள்ள ஐஜிபிக்கு எதிராக வழக்கு தொடுத்திருப்பது நியாயத்தின் அடுத்தக் கட்டப் போராட்டம் என்றும் அவர் கூறினார்.