கோலாலம்பூர், ஜூலை 2 – மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் விண்டோஸ் இயங்குத்தளத்தின் அடுத்த பதிவின் முன்னோட்டத்தினை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மிகுந்த ஈடுபாட்டுடன் மைக்ரோசாஃப்ட் உருவாக்கி வரும் விண்டோஸ் இயங்குத்தளத்தின் அடுத்த பதிவான விண்டோஸ் 9, அடுத்த ஆண்டு (2015) -ல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 9-ஐ வெகு விரைவில் வெளியிட தீர்மானித்துள்ளதாக மைக்ரோசாஃப்ட் வட்டாரங்கள் கூறுகின்றன.
‘திரஸ்ஹோல்டு‘ (Threshold) என்ற குறிப்பு பெயருடன் அழைக்கப்படும் இந்த இயங்குத்தளமானது விண்டோஸ் 9 என்ற பெயரிலோ அல்லது வேறு பெயரிலோ வெளியிட மைக்ரோசாஃப்ட் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
மீண்டும் ஸ்டார் மெனு:
விண்டோஸ் 9-ல் விசைப்பலகை (Keyboard) மற்றும் சுட்டி (Mouse) ஆகியவற்றை மட்டும் உள்ளீட்டு சாதனங்களாகப் பயன்படுத்தாமல் தொடுதிரைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என கூறப்படுகின்றது. மேலும், ஸ்டார் பட்டியல் விண்டோஸ் 9-ல் மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகின்றது.
மேலும், விண்டோஸ் 9-ல் மெட்ரோ-ஸ்டைல் செயலிகள் ‘டெஸ்க்டாப்‘ (Desktop)-ல் பயன்படுத்தப் படலாம் என்றும் கூறப்படுகின்றது.
தற்போது விண்டோஸ் 8.1-ன் குறிப்பிடத்தகுந்த மேம்பாட்டினை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடத் தயாராகும் மைக்ரோசாஃப்ட், அதற்குப் பின் விண்டோஸ் 9-ஐ வெளியிட தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.