சென்னை, ஜூலை 2 – 3, எதிர்நீச்சல்,வணக்கம் சென்னை,மான் கராத்தே என பல வெற்றிப் படங்களில் வித்தியாசமான முறையில் இசை அமைத்து பிரபலமானவர் இளம் இசையமைப்பாளர் அனிருத்.
மிகவும் குறுகிய காலத்தில் இளைஞர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஒரே சரணத்தில் பாடல்களை இசையமைத்து அவர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.
இப்பொழுது ஏ.ஆர் முருகாதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘கத்தி’ திரைப்படத்தில் இசையமைத்து வருகிறார் அனிருத்.
அதில் விஜய் பாடும் ஒரு பாடலுக்காக தன்னுடைய பாடலை புதிய பாணியில் இரண்டு சரணங்கள் கொண்டு இசையமைத்துள்ளதாக பிரபல வார இதழான, ‘குங்குமத்தில்’ தெரிவித்துள்ளார்.
இதையும் தவிர்த்து ஒரு புது முயற்சியாக ‘சான்ஸே இல்ல”என்ற பெயரில் ஒரு தனி ஆல்பம் தயாரிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார் அனிருத்.
இந்த ஆல்பம் முழுக்க முழுக்க சென்னையின் சிறப்புகளையும் பெருமைகளையும் பறை சாற்றும் வகையில் அமையப் போவதாக தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் இருக்கும் மெரினா கடற்கரை, எல்.ஐ.சி மற்றும் இன்னும் பல இடங்களில் படம்பிடிப்பு நடக்கவிருக்கின்றது. இதில் அனிருத்துடன் 100 நடன கலைஞர்கள் நடனமாடியுள்ளனர்
‘சான்ஸே இல்ல’ என்ற இந்த ஆல்பத்திற்கு சதீஸ் மாஸ்டர் நடன இயக்குனராகவும், ‘கத்தி’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் இந்த ஆல்பத்தில் ஒளிப்பதிவாளராகவும் பணி புரிகின்றனர்.
இந்த ஆல்பம் பணக்காரார் முதல் ஏழை வரை அனைவரையும் சென்று அடைய வேண்டும் என்ற விருப்பத்தில் யூ டியுப், ரேடியோ, டிவி என அனைத்து ஊடகங்களிலும் வெளியீடு செய்யவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து எதிர்காலத்தில் எமி ஜெக்சானுடன் ஜோடியாக சேர்ந்து ஆல்பத்தில் நடிக்கவும் மற்றும் ரஜினியின் படத்திற்கு இசையமைக்கவும் விரும்புவதாக அனிருத் கூறியுள்ளார்.
இருப்பினும், பட நாயகனாக நடிக்க தற்பொழுது விருப்பம் இல்லை என்றும் அனிருத் அறிவித்துள்ளார்.