சியோல், ஜூலை 3 – வட கொரியா தங்கள் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் மீண்டும் இரண்டு குறுகிய தூரத்தைக் கடக்கும் ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளது.வட கொரியாவின் இந்த இராணுவ நடவடிக்கைக்கு தென் கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் சேர்ந்து கடந்த ஓராண்டாக நடத்தி வரும் போர் பயிற்சியை நிறுத்தி எல்லையில் நிலவும் பதட்டத்தை தணிக்குமாறு தென் கொரியாவிடம் வடகொரியா கேட்டுக்கொண்டது.
ஆனால் வடகொரியாவின் கோரிக்கையை அந்நாடு நிராகரித்ததால் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. வட கொரியா, தென் கொரியா இடையே பல வருடங்களாக இருந்து வரும் பகை உணர்வு காரணமாக அவ்வபோது இருநாடுகளும் தங்கள் அணு ஆயுத பலத்தினை வெளிப்படுத்தி வருகின்றன.
அணு ஆயுத ஒழிப்பை முன்னிறுத்தி உலக நாடுகள் போராடி வரும் இந்த தருணத்தில் இரு நாடுகளின் அணு ஆயுத வளர்ச்சி உலகை பெரிதும் அச்சுறுத்தி வருகின்றது.
வட கொரியாவின் கிழக்கு கடற்கரை நகரமான வோன்சன்னிலிருந்து கடலில் 180 கி.மீ தூரத்திற்கு பாயந்த இந்த ஏவுகணைகள் இலக்கை வெற்றிகரமாக தாக்கியதாக கூறப்படுகின்றது.சீன அதிபர் சீ ஜிங்பிங், தென் கொரியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது பதட்டத்தை அதிகரித்துள்ளது.