கோலாலம்பூர், ஜூலை 3 – பாலியல் குற்றச்சாட்டின் விசாரணைக்காக நியூசிலாந்திற்கு திரும்பி அனுப்பப்படவுள்ள முன்னாள் மலேசிய தூதரக அதிகாரி முகமட் ரிஸல்மான் இஸ்மாயில், அந்நாட்டிற்கு சென்றவுடன் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என வெலிங்டன் காவல்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து வெலிங்டன் காவல்துறை ஆணையர் சாம் ஹோய்லி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நியூசிலாந்திற்கு வரும் ஒருவரை கைது செய்யுமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டால், அவர் எல்லையிலேயே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “நீதிமன்றம் அவரை தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிடலாம் அல்லது விதிமுறைகளுடனோ அல்லது அது இல்லாமலோ பிணையில் விடுதலை செய்யலாம். அதே சமயத்தில் அடுத்த விசாரணைக்கான நாள் உட்பட முடிவு செய்யப்படும்” என்றும் சாம் ஹோய்லி கூறியுள்ளார்.
தற்போது முகமட் ரிஸல்மானுக்கு கோலாலம்பூர், வாங்சா மாஜுவில் உள்ள, துங்கு மிஸான் இராணுவ மருத்துவமனையில், உளவியல் ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவர் வெள்ளிக்கிழமை நியூசிலாந்திற்கு அனுப்பப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.