கோலாலம்பூர் – நியூசிலாந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் சிக்கிய முன்னாள் மலேயத் தூதரக அதிகாரி ரிசல்மானின் சார்பில், இன்று வெலிங்டன் உயர்நீதிமன்றத்தில் பிரதிநிதித்த அவரது வழக்கறிஞர், தனது கட்சிக்காரரை ‘சில தீயசக்திகள்’ ஆட்டிப் படைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
குயின்ஸ் கவுன்சிலைச் சேர்ந்த டொனால்டு ஸ்டீவன் என்ற அந்த வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் கூறுகையில், வெலிங்டன் பாதுகாப்புப் பிரிவில் பதவி ஏற்றதில் இருந்தே ரிசல்மானின் ஆரோக்கியத்திலும், குணநலன்களிலும் மாற்றம் ஏற்றப்பட்டதாக அவரது மனைவி நம்புகிறார் என்று தெரிவித்துள்ளார்.
சில நேரம் நன்றாக இருக்கும் ரிசல்மான், சில நேரம் வித்தியாசமாக நடந்து கொண்டதாகவும், காரணமே இன்றி பலமணி நேரங்களில் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்ததாகவும் அவர் மனைவி தெரிவித்ததாக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு அவரது மனநிலை சரியாக இல்லாத காரணத்தினால் தான், ஒரு பெண்ணின் அறையில் அவளின் அனுமதியின்றி நுழைந்து கால்சட்டையின்றி நிற்கிறோம் என்பதை அவர் அறியவில்லை என்றும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதற்குக் காரணம் ரிசல்மானின் மனநல மாற்றமா? அல்லது போதை வஸ்துகள் எதுவும் காரணமா? என்பதை வெலிங்டன் நீதிமன்றம் ஆராய்ந்த போது வழக்கறிஞர் டொனால்டு ஸ்டீவன் இந்த அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார்.