பிரேசில், ஜூலை 4 – உலகக் கிண்ண காற்பந்து போட்டிகள் தொடங்கியது முதல் காற்பந்து இரசிகர்களின் – விமர்சகர்களின் பார்வையில் கதாநாயகனாக உலா வந்தவர் பிரேசிலின் முன்னணி ஆட்டக்காரர் – 10ஆம் எண் கொண்ட சட்டை அணிந்து விளையாடும் நெய்மார்.
ஆனால், அவரது கதாநாயக பிரபல்யத்துக்கு ஈடாக, அவருக்கு நேர் எதிர் வில்லனாக இன்னொரு 10ஆம் எண் கொண்ட விளையாட்டாளர் உருவெடுத்துள்ளார்.
அவர்தான் கொலம்பியாவின் 10 எண் கொண்ட சட்டையணிந்து விளையாடும் ஜேம்ஸ் ரோட்ரிகுயஸ்.
இன்று நடைபெறும் பிரேசில்-கொலம்பியா நாடுகளுக்கிடையிலான கால் இறுதி ஆட்டத்தைக் காண காத்து நிற்கும் காற்பந்து இரசிகர்கள் மனங்களில் குடி கொண்டிருக்கும் கேள்வி இன்று கலக்கப்போவது யாரு? நெய்மாரா? ரோட்ரிகுயசா? என்பதுதான்!
இருவருக்கும் ஏகப்பட்ட பொருத்தங்கள்
நெய்மார் – ரோட்ரிகுயஸ் இருவரையும் தகவல் ஊடகங்கள் ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கி விட்டன. இருவருக்குமே பல ஒற்றுமைகள் இருப்பதுதான் ஆச்சரியம்!
இருவருக்குமே வயது 22 வயதுதான் ஆகின்றது. இருவருமே 10ஆம் எண் கொண்ட சட்டை அணிந்து விளையாடுகின்றார்கள்.
உயரத்திலும் இருவரும் ஏறத்தாழ ஒரே அளவுதான். நெய்மார் 175 சென்டிமீட்டர் உயரத்தைக் கொண்டிருக்க ரோட்ரிகுயஸ் 180 சென்டிமீட்டர் உயரம் தொடுகின்றார்.
2014 உலகக் கிண்ணப் போட்டிகளில் இதுவரை அதிக கோல்களை அடித்த விளையாட்டாளர்கள் வரிசையிலும் இருவரும் கடும் போட்டியில் உள்ளனர். நெய்மார் இதுவரை 4 கோல்கள் அடித்துள்ள வேளையில், அவரைவிட கூடுதலாக ஒரு கோல் அடித்து 5 கோல்களுடன் ரோட்ரிகுயஸ் முன்னணியில் இருக்கின்றார்.
பிரேசிலுக்கு நிறைய அழுத்தங்கள்
இன்றைய ஆட்டத்தில் பிரேசில் ஏகப்பட்ட மன அழுத்தங்களுடன் களம் இறங்குகின்றது. ஏன் பயத்துடன் விளையாடப் போகின்றது என்று கூட சொல்லலாம்.
காரணம், கடைசியாக அவர்கள் சிலியுடன் விளையாடிய ஆட்டத்தில் பிரேசில் விளையாட்டாளர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு, சிலி ஆட்டக்காரர்கள் கடுமையான போட்டியை வழங்க, ஆட்டம் முடிந்தவுடன் பல பிரேசில் விளையாட்டாளர்கள் அழுதே விட்டனர், நெய்மார் உட்பட!
காரணம், 1-1 என்ற நிலையில் ஆட்டம் முடிவடைய – பினால்டி கோல்கள் மூலம் வெற்றியை நிர்ணயிக்க வேண்டிய சூழ்நிலையில் இறுதி ஒரே பினால்டியை கூடுதலாக அடித்து பிரேசில் வெல்ல வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டது.
பிரேசில் பயிற்சியாளர் ஷோலாரி பதட்டத்தின் உச்சத்திற்கே போன காட்சியை தொலைக்காட்சி இரசிகர்கள் கண்டார்கள்.
போட்டிகளை ஏற்று நடத்துகின்ற நாடு என்ற காரணம் அழுத்துவது ஒருபுறம் இருக்க –
ஒரு சில பிரிவினர் இன்னும் வறுமைப் பிடியில் இருக்கும் நாட்டில் கோடிக்கணக்கான பணத்தை இப்படி விளையாட்டில் கொட்டுவது நியாயமா என போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் பலரை வாயடைக்க வைப்பதற்கு ஒரே வழி கிண்ணத்தை வென்று காட்டுவதுதான் என்ற முனைப்பில் பிரேசில் குழு இறங்கியுள்ளது.
கொலம்பியாவுக்கு அழுத்தமில்லை – அதனால் பதட்டமில்லை
கொலம்பியாவின் பயிற்சியாளர் ஜோஸ் பெக்கர்மேன்
ஆனால், அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக – எதிர்பாராத வில்லனாக உருவெடுத்து நிற்பது கொலம்பியா குழு.
எதிர்பாராத விதமாக கால் இறுதி வரை வந்துவிட்ட கொலம்பியா குழுவுக்கு பிரேசிலுக்கு இருப்பது போன்ற எந்தவித அழுத்தங்களும், பதட்டங்களும் இல்லை.
அதோடு, ரோட்ரிகுயசின் அதிரடி ஆட்டமும் சேர்ந்து கொண்டுள்ளதால், கொலம்பியா குழு நிதானமாக விளையாடும்.
இன்றைக்கு மட்டும் பிரேசிலை, தோற்கடித்துவிட்டால் – அதுவே கிண்ணத்தையே வென்றுவிட்டதற்கு ஈடான மிகப்பெரிய வெற்றி என்ற இலக்குடன் கொலம்பியா களமிறங்குகின்றது.
எல்லாவற்றையும் விட, 2014ஆம் உலகக்கிண்ணத்தின் முடிசூடப் போகும் மன்னன் நான்தான் என நெய்மார் மார்தட்டிக் கொண்டிருக்க – இதோ நான் இருக்கின்றேன் என்ற பாணியில் ரோட்ரிகுயஸ் தன் தலையை உள்ளே நுழைத்திருக்கின்றார்.
இன்றைய ஆட்டம் இரண்டு குழுக்களின் தலைவிதியை நிர்ணயிப்பதோடு மட்டுமல்லாமல் – இரண்டு உலகப் புகழ் பெற்ற ஆட்டக்காரர்களின் சாதனைகளையும் நிர்ணயிக்கும் களமாக அமையப் போகின்றது.
தூக்கம் கெட்டாலும் பார்க்கத் தவறாதீர்கள்!
-இரா.முத்தரசன்