சென்னை, ஜூலை 4- சென்னை மவுலிவாக்கத்தில் ஏற்பட்ட கட்டிட விபத்தில், இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் உடலில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளதால், தொற்று நோய் பரவக்கூடும் என்று அஞ்சப்படுகின்றது. மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து எற்பட்ட இடத்தில் மீட்பு பணிகள் 6ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 61 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அந்த பகுதியில் அவ்வப்போது மழையும் பெய்து வருவதால் மீட்பு பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்படுகின்றது என கூறப்படுகின்றது. மேலும் அப்பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து தாம்பரம், முடிச்சூர், மாங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து துப்புரவு தொழிலாளர்கள் 300 -க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டு, மழைநீர் தேங்கிய இடங்களில் பிளீச்சிங் பவுடர், கொசு மருந்துகள் உள்ளிட்டவை அடித்த வண்ணம் உள்ளனர்.
மேலும் இடிபாடுகளை மீட்கும் இடத்தில் சற்று துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளதால் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் முகத்தில் கவசம் அணிந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தொற்று நோய் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.