பிரேசில், ஜூலை 5 – இன்று மலேசிய நேரப்படி அதிகாலை நடைபெற்ற பிரேசிலுக்கும் கொலம்பியாவுக்கும் இடையிலான பரபரப்பான ஆட்டத்தில் “நான்தான் கதாநாயகன்” என்பதை நிரூபிக்கும் வண்ணம், நெய்மாரின் சிறப்பான ஆட்டத்தோடு விளையாடிய பிரேசில் குழு வென்றது.
முதுகெலும்பில் அடிபட்டு நெய்மார் திடலில் விழுந்து துடித்த காட்சி
ஆனால், ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில், விளையாட்டாளர்களோடு ஏற்பட்ட மோதலில் முதுகெலும்பில் அடிபட்டு, வலியோடு நெய்மார் வெளியேறிய சோகமும்,
அதனால், தற்போது மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் அவர், அடுத்த சில வாரங்களுக்கு அவரால் காற்பந்து அரங்கில் விளையாட முடியாது என்பதனால், இனி உலகக் கிண்ணப் போட்டியின் இறுதி ஆட்டம் வரையில் பிரேசிலுக்காக விளையாட முடியாது என்ற பரிதாப முடிவும் ஏற்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற பிரேசில்-கொலம்பியா போட்டியில் கதாநாயகனாக நெய்மார் உருவெடுப்பாரா? அல்லது கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிகுயஸ் (படம்) தலைதூக்குவாரா? என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது.
கொலம்பியா குழு சிறப்பாக விளையாடினாலும் பிரேசில் குழுவின், வெறித் தனமான ஆதிக்க ஆட்டத்தினாலும் அவர்களுக்கு அரங்கில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பிரேசில் ரசிகர்கர்கள் வழங்கிய ஏகோபித்த ஆதரவினாலும் கொலம்பியா குழு தேல்வியைத் தழுவியது.
கொலம்பியாவின் முன்னணி ஆட்டக்காரர் ஜேம்ஸ் ரோட்ரிகுயஸ் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. ஆட்டம் முடிந்ததும் கண்ணீருடன் அழுத கொண்டே ரோட்ரிகுயஸ் திடலை விட்டு வெளியேறிய காட்சியை கோடிக்கணக்கான தொலைக்காட்சி ரசிகர்கள் கண்டனர்.
நெய்மாருக்கு முதுகெலும்பில் அடி
பிரேசிலின் சார்பாக நெய்மார் நேற்றைய ஆட்டத்தில் கோல் எதுவும் அடிக்கவில்லை என்றாலும் பிரேசில் வெற்றிக்கு பேருதவியாக திகழும் வண்ணம் சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார்.
வலியால் துடித்த நெய்மார் படுக்கையில் கிடத்தப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றார்….
இதன் காரணமாக, ஆட்டத்தின் கதாநாயகன் நான்தான் என்று நெய்மார் நிரூபித்துவிட்டாலும் இதில் சோகம் என்னவென்றால் இந்த ஆண்டுக்கான அடுத்தக் கட்ட உலகக் கிண்ண ஆட்டங்களில் விளையாட முடியாத அளவிற்கு அவர் இந்த விளையாட்டின் போது அடிபட்டு விட்டது தான்.
இலாவகமான விளையாட்டுக்காரர், நளினமாக பந்தை எடுத்துச் சொல்லக் கூடியவர் என்றாலும் நெய்மார் ஒல்லியான உடல்வாகு கொண்டவர். நேற்று நடைபெற்ற ஆட்டத்தின் போது கொலம்பியா ஆட்டக்காரர்களுடன் நிகழ்ந்த மோதலில் கீழே விழுந்து வலியால் துடித்த நெய்மார் கண்ணீருடன் திடலை விட்டு எடுத்துச் செல்லப்பட்டார்.
அடுத்த கட்ட ஆட்டங்களில் நெய்மார் விளையாட முடியாது
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற மருத்துவ பரிசோதனையின் போது முதுகெலும்பு பகுதியில் அவருக்கு அடிபட்டிருப்பதாகவும் இதனால் அவர் அடுத்தக்கட்ட பிரேசில் ஆட்டங்களில் கலந்து கொண்டு ஆட முடியாது என பிரேசில் குழுவின் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
அவருக்கு ஏற்பட்ட முதுகெலும்பு முறிவு கூடிய விரைவில் குணமாகும் தன்மை கொண்டது என்றாலும், இதற்கு அறுவை சிகிச்சை தேவையில்லை என்றாலும் அடுத்த வாரத்திற்குள் அவரால் காற்பந்து அரங்கில் விளையாட முடியாது. அடுத்த சில வாரங்களுக்கு அவர் காயம் பட்ட இடத்தில் இறுகக் கட்டப்பட்ட பட்டையோடு நடமாட வேண்டியிருக்கும்.
கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற நிலையில் பிரேசில் குழு வெற்றி பெற்றாலும் அந்த கோலாகலத்தை கொண்டாட முடியாத சோகத்தை தனது குழுவினருக்கும் பிரேசில் நாட்டு மக்களுக்கும் நெய்மார் ஏற்படுத்திவிட்டார்.
எதிர்வரும் அரையிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஜெர்மனி குழுவுடன் பிரேசில் மோதவிருக்கின்றது.
நெய்மார் இல்லாத பிரேசில் குழு ஜெர்மனியை வென்று சாதிக்குமா? அல்லது அவர் இல்லாத பலவீனத்தால் தோல்வியைச் சந்திக்குமா என்பதுதான் தற்போது காற்பந்து ரசிகர்களிடையே எழுந்துள்ள கேள்வியாகும்.
-இரா.முத்தரசன்