பிரேசில், ஜூலை 6 – எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, இந்த முறை உலகக் கிண்ணப் போட்டிகளை ஏற்று நடத்தும் பிரேசில், அரை இறுதி ஆட்டத்தில் பலம் பொருந்திய ஜெர்மனி குழுவைச் சந்திக்கின்றது.
ஆனால், பிரேசில் குழு அரை இறுதி ஆட்டம் வரை வந்து சேர்வதற்கு முக்கியமான காரணகர்த்தாவாக விளங்கிய முன்னணி விளையாட்டாளர் நெய்மார் இந்தப் போட்டியில் விளையாடக் கூடிய சூழ்நிலையில் உடல் நலத்தோடு இல்லை என்ற செய்தி மற்ற பிரேசில் விளையாட்டாளர்களளையும், பிரேசில் மக்களையும் பாதித்துள்ளது.நெய்மார் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் தூக்கிச் செல்லப்பட்ட காட்சி.
கால் இறுதி ஆட்டத்தில் கொலம்பியக் குழுவுடன் களம் கண்ட பிரேசில் குழுவினர், கடும் போராட்டத்திற்குப் பின்னர் 2-0 கோல் எண்ணிக்கையில் வெற்றி வாகை சூடினர்.
இருப்பினும் இந்த ஆட்டத்தின்போது கொலம்பியா ஆட்டக்காரர்களுடன் நிகழ்ந்த முட்டல் மோதலில் நெய்மாருக்கு முதுகெலும்பு முறிவு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர் பிரேசில் குழுவின் பயிற்சி அரங்கத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் நேற்று ஜூலை 5ஆம் நாள் மருத்துவ சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.இனி நான்கு வாரங்களுக்கு அவரால் காற்பந்து அரங்கில் விளையாட முடியாது என்றும் மருத்துவ குழுவினர் அறிவித்துள்ளனர்.
நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை அரை இறுதி ஆட்டத்தில் மற்றொரு பலம் பொருந்திய குழுவான ஜெர்மனியுடன் மோதவிருக்கும் பிரேசிலுக்கு நெய்மாரின் காலியிடம் பெருத்த பலவீனமாகக் கருதப்படுகின்றது.
தனது தந்தையுடன் ஹெலிகாப்டர் மூலம் படுத்த படுக்கையாக கொண்டு செல்லப்படும் நெய்மார் வழியனுப்பியவர்களை நோக்கி கையசைத்து விடைபெறுகின்றார்.