ஜூலை 7 – இந்திய மீனவர்களின் மிக நீண்ட கால பிரச்சனையான கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க உரிமை கோருவது தொடர்பாக நிரந்தர தீர்வு காண இந்திய அரசு முயற்சிகள் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கச்சத்தீவை சுற்றியுள்ள கடல் பகுதியில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு இலங்கை அரசு உரிமங்கள் வழங்க வேண்டும் என இந்தியா வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், விரைவில் இந்தியா வர இருக்கும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸிடம், இது தொடர்பான விவாதங்களை இந்திய அரசு முன்வைக்கும் என்றும் கூறப்படுகின்றது.
இதுகுறித்து கொழும்பில் இருந்து வெளியாகும் “சன்டே டைம்ஸ்’ எனும் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், “இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ், இந்தியாவில் வரும் புதன்கிழமை முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.”
“கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையால் தாக்கப்படும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்தியாவில் அமைந்துள்ள புதிய அரசு திட்டமிட்டுள்ளது.
குறிப்பிட்ட அந்த பகுதியில் மீன்பிடிக்க வரும் இந்திய மீனவர்களுக்கு இலங்கை அரசு வர்த்தக உரிமங்கள் வழங்க வேண்டும் என்று இந்தியா விரும்புகின்றது.”
“வரும் வெள்ளிக்கிழமை டெல்லியில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இலங்கை அமைச்சர் பெரீஸிடம் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்” என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரியில், கச்சத்தீவு கடற்பகுதியில் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.