Home நாடு செல்லியல் பார்வை: மா நியமனம் – இந்து விவகாரம் வேறு! இந்தியர் விவகாரம் என்பது வேறு!

செல்லியல் பார்வை: மா நியமனம் – இந்து விவகாரம் வேறு! இந்தியர் விவகாரம் என்பது வேறு!

1037
0
SHARE
Ad

07கோலாலம்பூர், ஜூலை  7 – பல நூற்றாண்டு கால வரலாற்றை இந்த நாட்டில் கொண்டிருக்கும் இந்து மதம்,  கடந்த 50 ஆண்டுகளில் சந்தித்த சவால்கள் – சிறுமைப்படுத்தும் சம்பவங்கள் – என மூன்று முக்கியமான, மறக்க முடியாத சரித்திரப் பிரசித்தி பெற்ற சம்பவங்களைக் கூறலாம்.

இந்த சம்பவங்கள்தான் இந்து சமயத்தின் திசையையும்,போக்கையும் நமது நாட்டில் நிர்ணயித்தன என்பதோடு, பல சமூக, அரசியல் மாற்றங்களும் நமது நாட்டில் உருவாகவும் அந்த சம்பவங்கள் வழிவகுத்தன.

முதலாவது, 1978-79ஆம் ஆண்டு கால வாக்கில் நாடெங்கிலும் இந்துக்கோவில்களுக்கு எதிராக – ஒரு சில தகாத பேர்வழிகளால் மேற்கொள்ளப்பட்ட சிலை உடைப்பு சம்பவங்கள்.

#TamilSchoolmychoice

அந்த காலகட்டத்தில் எல்லா ஆலயங்களுக்கும் எங்களால் பாதுகாப்பு தரமுடியாது என அரசாங்கத் தரப்பிலும் – காவல் துறை தரப்பிலும் அறிவிக்கப்பட, ஒரு சில ஆலயங்களில் அந்த ஆலயத்தின் நிர்வாகத்தினரே தங்களின் ஆலய சிலைகளைப் பாதுகாக்கும் இரவு நேர காவல் ரோந்து பணிகளை மேற்கொள்ளும் நிலைமை ஏற்பட்டது.

அப்போது ஒருநாள் சிலாங்கூரிலுள்ள கெர்லிங் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில், இரவு நேரத்தில் சிலைகளை உடைக்க வந்த  நபரை, அங்கு காவல் இருந்த ஆலய நிர்வாகத்தினர் தற்காப்புக்காக தாக்க, அதன் காரணமாக சிலைகளை உடைக்க வந்த அந்த நபர் உயிரிழந்தார்.

நாடு முழுக்க பரபரப்பையும், பதட்டத்தையும் ஒருங்கே ஏற்படுத்திய இந்த சம்பவம்தான் அரசாங்கத்தையும், மற்ற இனங்களையும், நமது இந்து சமயத்தை நோக்கி மீள்பார்வை பார்க்க வைத்தது.

பின்னர்,வழக்கு நடைபெற்று சம்பந்தப்பட்ட சிலர் சிறைத் தண்டனையையும் பெற்றனர்.

இந்து சமயத்திற்கு, இந்து ஆலயங்களுக்கு தீங்கு நேருமென்றால் – அதற்காக தங்களின் உயிரையும் பணயம் வைத்து இந்துக்கள் போராடுவார்கள் – தற்காப்புக்காக உயிரையும் எடுப்பார்கள் – என்பதை எடுத்துக் காட்டியது அந்த சம்பவம்.

அதன்பின்னர் இந்து ஆலய விவகாரங்களில், அரசாங்கத்தின் அணுகுமுறையிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டன.  அதன் பின்னர் அடுத்த பல ஆண்டுகளுக்கு இது போன்ற சம்பவங்கள் நிகழவே இல்லை.

hindrafஇரண்டாவது சம்பவம்; 2007 -ல்

கடந்த 2007ஆம் ஆண்டு அரசாங்கத்தால் குறிப்பாக, சிலாங்கூர் மாநில அரசால் அதிகாரபூர்வமாக மேற்கொள்ளப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் உடைப்புகள் இந்துக்களின் உணர்வுகளை மீண்டும் சீண்டிப் பார்த்தது.

அதோடு, எவரெஸ்ட் மலை ஏறும் வீரர் மூர்த்தியின் இஸ்லாம் மத மாற்றப் பிரச்சனையும் சேர்ந்து கொள்ள,

பொங்கி எழுந்த மலேசிய இந்துக்கள் அப்போது இந்து மதத் தற்காப்புக்காக உருவாக்கப்பட்ட ஹிண்ட்ராப் இயக்கத்திற்கு தங்களின் முழு ஆதரவை வழங்கினார்கள்,

தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக 2007ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி ஏறத்தாழ ஒரு இலட்சம் இந்தியர்கள் தலைநகரின் வீதிகளில் திரண்டதற்குப் பின்னணியில் ஹிண்ட்ராப் மீதான அவர்களின் ஆதரவும் – அரசாங்கத்தின் ஆலய உடைப்புக் கொள்கையும்தான் காரணம்.

ஆனால் அந்த இந்து எழுச்சியை சரியாக உணராத அப்போதைய பிரதமர் அப்துல்லா படாவியின் அரசு – உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஹிண்ட்ராப் தலைவர்கள் கைது படலத்தை ஆரம்பிக்க – அதனால் அடுத்து வந்த 2008  பொதுத் தேர்தலில் படுமோசமான தோல்வியைச் சந்தித்தது.

அப்போது இழந்த பினாங்கு, சிலாங்கூர் மாநிலங்களை மீண்டும் கைப்பற்ற முடியாமல் இன்றுவரை தவிக்கின்றது.

3வது சம்பவம் – மா சியூ கியோங் நியமனம்GERAKANMahSiewKeong2311

இப்போது மூன்றாவது சரித்திரப் பிரசித்தி பெற்ற சம்பவமாக – மலேசிய இந்துக்களை சிறுமைப்படுத்தும், புண்படுத்தும் விதத்தில் அரங்கேறியிருப்பது  பிரதமர் துறை அமைச்சர் டத்தோ மா சி கியோங்கின் இந்து அறநிலையத் துறை விவகார நியமனம் என தயக்கமின்றி கூறலாம்.

மலேசிய இந்துக்களை  இதைவிட மட்டமாக, கேவலமாக, சிறுமைப்படுத்தும் விதமாக நமது அரசாங்கம் இன்னொரு விதத்தில் நடத்திவிட முடியாது.

சேவியரோடு ஒப்பிடுவது நியாயமா?

மா சியூ கியோங் நியமனத்தைப் பற்றி தெரிவிக்கப்பட்ட கருத்துக்களில் சிலாங்கூர் மாநிலத்தில் இந்து ஆலய விவகாரங்களை ஒரு கிறிஸ்தவரான சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கையாண்டார் என்ற ஒப்பீடும் கூறப்பட்டிருக்கிறது.

ஆனால் இது ஒரு தவறான ஒப்பீடாகும்.

சிலாங்கூர் ஆட்சிக் குழுவில் சேவியர் ஜெயக்குமார் மட்டும் தான் இடம் பெற்றிருந்த ஒரே இந்தியராவார். இந்தியர் நலன்களை கவனிக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்து ஆலய விவகாரங்களும் அதில் சேர்க்கப்பட்டு அவற்றை தமது பதவி காலத்தின் போது சேவியரும் சிறப்பாகவே கையாண்டார் என்பது அனைவரும் ஏற்றுக் கொண்ட ஓர் உண்மையாகும்.

ஆனால், மா விவகாரம் அப்படியல்ல.

xavier0723மஇகா சார்பாக இன்றைக்கு அரசாங்கத்தில் இரண்டு முழு அமைச்சர்கள் மற்றும் இரண்டு துணை அமைச்சர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இவர்களை தவிர பிபிபி கட்சியின் சார்பாக லோகபாலாவும் இடம் பெற்றிருக்கிறார்.

அரசாங்கத்தில் இப்படி 5 இந்துக்கள் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் வேளையில், இவர்கள் ஐவரையும் தாண்டி ஒரு சீனரை – இந்து மதத்தைச் சாராத ஒருவரை நியமித்திருப்பது தான் இந்துக்களை சிறுமைபடுத்தும் – கேவலப்படுத்தும் செயலாக பார்க்கப்படுகிறது.

சேவியர் விவகாரத்தில் இப்படிப்பட்ட மாற்றுத் தேர்வுகள் சிலாங்கூர் அரசாங்கத்திடம் இருக்கவில்லை. ஒரே ஒரு இந்திய ஆட்சிக் குழு உறுப்பினர் மட்டும்தான் இருந்தார் என்பது ஒருபுறமிருக்க,

மக்கள் கூட்டணி அரசாங்கமோ,பல இன கொள்கையை கட்சி ரீதியாகவும் அரசாங்க ரீதியாகவும் பின்பற்றும் கட்சியாகும்.

ஆனால், தேசிய முன்னணியோ ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு கட்சி என்ற அடிப்படையில் இன ரீதியாக செயல்படும் கூட்டணியாகும்.

இந்துக்கள் விவகாரம் வேறு – இந்தியர் விவகாரம் வேறு

எனவேதான், ஏறத்தாழ இரண்டு மில்லியன் இந்துக்களைக் கொண்ட நாட்டில் – ஐந்து இந்து அமைச்சர்களைக் கொண்ட அரசாங்கத்தில் – ஏன் இந்து விவகாரத்தை கவனிக்க இந்து அல்லாத இன்னொருவர் என்பதுதான் கேள்வி.

இதனால்தான் இந்திய சமுதாயத்தில் பல்வேறு தரப்புகளிலிருந்து பலத்த எதிர்ப்புகளும் கண்டனக் குரல்களும் எழுந்துள்ளன.

இந்தியர் விவகாரம் என்பது வேறு – இந்து விவகாரம் என்பது வேறு

இந்தியர் விவகாரங்களை யார் வேண்டுமானாலும் கவனித்துக் கொள்ளலாம்.

ஆனால், இந்து விவகாரத்தை ஓர் இந்துவால்தான் புரிந்து கொள்ள முடியும் – ஓர் இந்துவால்தான் கையாள முடியும்.

எனவே மேலும் காலம் தாமதிக்காமல் மா சி கியோங்கின் நியமனத்தை மீட்டுக்கொண்டு,

அரசாங்கம் அவருக்கு பதிலாக மற்றொரு இந்து சமயம் சார்ந்த அமைச்சரை இந்து விவகாரத் துறைகளை கவனிக்க நியமிப்பதுதான் சாலச் சிறந்ததாகும்.

-இரா.முத்தரசன்