மைதுகுரி, ஜூலை 7 – நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட முஸ்லிம் அரசை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறார்கள். இவர்கள் நடத்திய தாக்குதல்களில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் போர்னோ மாநிலத்தில் சிபோக் என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கூட மாணவிகள் 276 மாணவிகளை தீவிரவாதிகள் கடத்திச்சென்றனர்.
அதில் இதுவரை 200 பேர் மீட்கப்படவில்லை. மேலும், கிராமங்களுக்குள் புகுந்து அங்கு இருந்த சில பெண்களையும் அவர்கள் கடத்திச்சென்றுள்ளனர்.
இதற்கிடையே டாம்போவா நகரில் உள்ள ராணுவ தளத்தின் மீது தீவிரவாதிகள் கடந்த 4-ஆம் தேதி இரவு தாக்குதல் தொடுத்தனர். ராணுவத்தினர் பதிலடி கொடுத்ததில் தீவிரவாதிகள் 53 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் நடந்துகொண்டிருக்கும் போது தீவிரவாதிகளால் கடத்தி வைக்கப்பட்டிருந்தவர்களில் இருந்து 63 பெண்கள் மற்றும் மாணவிகள் அங்கிருந்து தப்பி வந்து விட்டனர். கடத்தப்பட்டு 83 நாட்களுக்கு பின்னர் அவர்கள் புத்திசாலித்தனமாக தப்பி ஓடி வந்து விட்டதாக உள்ளூர் பிரமுகர்கள் தெரிவித்தனர்.