பிரேசில், ஜூலை 8 – கடந்த ஒரு மாதமாக பரபரப்பாக நடைபெற்று வந்த உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளில் தற்போது அரையிறுதிப் போட்டிக்கு நான்கு நாடுகள் தேர்வாகியுள்ளன.
ஐரோப்பிய கண்டத்தின் இரண்டு நாடுகளான ஜெர்மனியும் நெதர்லாந்தும் தேர்வாகியுள்ள வேளையில், காற்பந்து விளையாட்டை கடவுளாகப் போற்றும் தென் அமெரிக்க மண்டலத்திலிருந்து இரண்டு நாடுகள் தேர்வாகியுள்ளன.
பிரசிலும் அர்ஜெண்டினாவும் தான் அந்த இரண்டு நாடுகள்.
ஜெர்மனியின் விளையாட்டாளர் க்ளோஸ் மற்ற விளையாட்டாளர்களுடன் பயிற்சியின் போது
முதற்கட்டமாக இன்று பிரேசிலும் ஜெர்மனியும் களம் காண்கின்றன. இந்த ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பு நாளை அதிகாலை 4.00 மணிககு ஆஸ்ட்ரோ அலைவரிசைகளில் ஒளிபரப்பாகும்.
அர்ஜெண்டினாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான மற்றொரு ஆட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த ஆட்டம் வியாழக்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு ஆஸ்ட்ரோ அலைவரிசைகளில் ஒளிபரப்பாகும்.
வெல்லப்போவது பிரேசிலா? ஜெர்மனியா?
பிரேசிலைப் பொறுத்தவரை போட்டிகளை ஏற்று நடத்தும் நாடு என்ற முறையிலும், அரங்கில் குவியப் போகும் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆதரவுக் குரல்கள் கிட்டும் என்பதாலும் பிரேசிலின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் பிரேசில் விளையாட்டாளர்கள்…
பிரேசிலின் பயிற்சியாளரான பிலிப் சோலாரியின் திறன்மிக்க வியூகங்களின் மூலமும் விளையாட்டாளர்களின் ஆக்ரோஷமான ஆட்டங்களின் மூலமும் ஜெர்மனியை வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை பிரேசில் கொண்டுள்ளது.
இதற்கு முன்னால் 2002 ஆம் ஆண்டில் உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியும் பிரேசிலும் மோதின. அப்போதும் இதே பிலிப் சோலாரி தான் பிரேசிலின் பயிற்சியாளராக இருந்தார். அந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வென்று 5ஆவது முறையாக உலகக் கிண்ணத்தை பிரேசில் வெற்றிகொண்டது.
எத்தனை ஆட்டங்கள்? எத்தனை வெற்றிகள்?
பிரேசில் பயிற்சியாளர் பிலிப் சோலாரி நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில்…
அதற்கு பின்னர், இப்போது தான் அந்த இரண்டு நாடுகளும் அரையிறுதி ஆட்டத்தில் சந்திக்கின்றன. இதுவரை உலக அளவிலான காற்பந்து போட்டிகளில் 21 முறை இந்த இரண்டு நாடுகளும் மோதியுள்ளன.
அவற்றில் பிரேசில் 12 முறை வென்றுள்ளது. ஜெர்மனி 4 முறை வென்றுள்ளது. 5 ஆட்டங்கள் சரிசமமான நிலையில் முடிந்திருக்கின்றன.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது இன்று நடைபெறும் ஆட்டத்தில் பிரேசில் தான் வெல்லும் என காற்பந்து விமர்சகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இருந்தாலும், பிரேசிலின் முன்னணி ஆட்டக்காரர் நெய்மார் முதுகெலும்பு முறிவால் இன்றைய ஆட்டத்தில் விளையாட மாட்டார் என்பது பிரேசிலுக்கு பெரும் பின்னடைவு ஆகும்.
ஜெர்மனியின் பயிற்சியாளர் ஜோசிம் லுயி – பயிற்சியின் போது…
அதேபோன்று மற்றொரு சிறந்த விளையாட்டாளரான தியாகோ சில்வாவும் இன்று விளையாட மாட்டார். இதனால், ஜெர்மனிக்கு வெற்றி பெறக் கூடிய சாதகமான சூழ்நிலை ஏற்படலாம்.
உலகக் கிண்ணத்திற்கான இரண்டு அரையிறுதி ஆட்டங்களிலும் ஒவ்வொன்றிலும் ஒரு ஐரோப்பிய நாடும் ஒரு தென் அமெரிக்க நாடும் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாட்டத்தில் மோதப் போவது ஐரோப்பிய நாடுகளா அல்லது தென் அமெரிக்க நாடுகளா?
அல்லது ஒவ்வொரு மண்டலத்திலிருந்து ஒரு நாடு தேர்வு பெறுமா? என்பதைக் காண காற்பந்து ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
-இரா.முத்தரசன்