Home நாடு சாமிவேலு தலைமையில் கோலாலம்பூரில் மீண்டும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

சாமிவேலு தலைமையில் கோலாலம்பூரில் மீண்டும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

833
0
SHARE
Ad

samy-velluகோலாலம்பூர், ஜூலை 9 – 1987ஆம் ஆண்டில், அப்போதைய ம.இ.கா தேசியத் தலைவராகவும், அமைச்சராகவும் இருந்த டத்தோஸ்ரீ ச.சாமிவேலு தலைமையில் 6வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் கோலாகலமாக நடந்தேறியது பல தமிழ் ஆர்வலர்களின் மனங்களில் இன்னும் பசுமையாக நினைவில் பதிந்திருக்கும்.

அதன் தொடர்ச்சியாக பின்னர் 7வது மாநாடு மொரிஷியசிலும், 1995ஆம் ஆண்டில் 8வது மாநாடு தமிழகத்தின் தஞ்சாவூர் மாநிலத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் பிரம்மாண்டமான அளவில் நடந்தேறியது.

மீண்டும் சாமிவேலு தலைமையில் மாநாடு

#TamilSchoolmychoice

தற்போது மீண்டும் சாமிவேலு தலைமையில் ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் 2015-ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

najib-razakஇம்மாநாட்டை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தொடக்கி வைப்பார் என சாமிவேலு நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

மலேசிய அனைத்துலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் ஏற்பாட்டிலான இந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2015-ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 1-ஆம் தேதி வரை மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

1964-ஆம் ஆண்டு தோற்றம் கண்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் கீழ் முதலாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 1966-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்றது. இம்மாநாட்டை மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்-ஹஜ் அப்போது தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் 1987-ஆம் ஆண்டு ஆறாவது மாநாடும் கோலாலம்பூரில் நடைபெற்றது. அதன் பின்பு தற்போது மீண்டும் இம்மாநாட்டை மலேசியா ஏற்று நடத்துவது மிகப்பெரிய மகிழ்ச்சியாக உள்ளது என சாமிவேலு கூறினார்.

இம்மாநாட்டில் மலேசியாவைத் தவிர்த்து உலகளவில் 2000க்கும்  மேற்பட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இம்மாநாட்டில் கலந்துகொள்ளவும், உரையாற்றவும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளோம் எனவும் சாமிவேலு இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.