பெட்டாலிங் ஜெயா, ஜூலை 10 – மலேசிய தூதரக அதிகாரியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 21 வயதான நியூசிலாந்து பெண், தனக்குநேர்ந்த கொடுமையை தானே நேரடியாக வெளியிட முன்வந்துள்ளார்.
அப்போது தான் தனது நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார பிரச்சனைகள் வெளி உலகிற்கு தெரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் தான் வெளியுலகிற்கு தெரிவிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருப்பதாகவும் தனியா பில்லிங்ஸ்லி (படம்) என்ற அந்த பெண் நியூசிலாந்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு நேற்று பேட்டி அளித்துள்ளார்.
இது குறித்து தனியா நேற்று நியூஸிலாந்து நாட்டின் சேனல் 3 என்ற செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “பாதிக்கப்பட்டவளான நான் யாரென்று வெளி உலகிற்கு தெரிவதன் மூலம் இந்த நாட்டில் நடக்கும் பாலியல் பிரச்சனைகள் அம்பலமாகட்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரிஸல்மான் கடந்த மே 22- ம் தேதி, நியூஸிலாந்தை விட்டு வெளியேறுகிறார் என்று காவல்துறை தன்னிடம் கூறியபோது, மிகவும் ஆத்திரமடைந்ததாகவும் தனியா கூறியுள்ளார்.
இந்த வழக்கில் ரிஸல்மானுக்கு நியூசிலாந்து சட்டப்படி சரியான தண்டனை வழங்க வேண்டும் என்பதால், அவரை நியூசிலாந்திலேயே வைத்திருக்குமாறு தான் ஆரம்பத்திலிருந்து கூறி வருவதாகவும் தனியா தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து நாட்டின் வெலிங்டன் நகரில் உள்ள புரூக்லி என்ற இடத்தில், தனியாவை பின் தொடர்ந்து சென்ற மலேசிய தூதரக அதிகாரி முகமட் ரிஸல்மான் (வயது 38), தனியாவின் வீட்டில் அவரை கற்பழிக்க முயன்றார் என்று குற்றச்சாட்டப்பட்டு, கடந்த மே 9 -ம் தேதி, அந்நாட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, மே 12 -ம் தேதி, மலேசியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கிடையிலான பேச்சு வார்த்தையில், சில விதிமுறைகளோடு ரிஸல்மானை மலேசியாவிற்கு அனுப்ப நியூசிலாந்து அரசு ஒப்புக்கொண்டது.
பின்னர், நியூசிலாந்து நாட்டில் இருந்து கடந்த மே 22 -ம் தேதி, ரிஸல்மான் தனது குடும்பத்தினருடன் மீண்டும் மலேசியாவிற்கு திரும்பினார்.
இந்நிலையில், ரிஸல்மானுக்கு எதிரான குற்றச்சாட்டிற்காக, அவர் மீண்டும் நியூசிலாந்திற்கு, தற்காப்பு அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த இராணுவ அதிகாரி ஒருவருடன் அனுப்பப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.