வாஷிங்டன், ஜூலை 11 – ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவிக்கான தேர்தலில் தொடர்ந்து சர்ச்சைகள் நீடிப்பதாலும், தீவிரவாதத்தாலும் நிலை குலைந்துள்ள அந்நாட்டில் மேலும் அரசியல் வன்முறைகள் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை உணர்ந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, அந்நாட்டு அதிபர் வேட்பாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையில் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
“ஆப்கானிஸ்தானின் தேசிய ஒருமைப்பாட்டை குலைக்கும் நோக்கத்துடன் எந்தவொரு அரசியல் கட்சியும் செயல்படக் கூடாது. அவ்வாறு செயல்பட்டால் கடுமையான பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்” என்று கூராப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க அதிபர் ஒபாமா, ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு போட்டியிட்டுள்ள வேட்பாளர்களான அப்துல்லா அப்துல்லா மற்றும் அஷ்ரஃப் கனி ஆகியோரிடமும் இது குறித்து தொலைபேசியில் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த மாதம் நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில், அப்துல்லா அப்துல்லா வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அஷ்ரஃப் கானி 56.44% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், இந்த முடிவை ஏற்க மறுத்த அப்துல்லா, மக்களுக்கு எதிரான சதி நடந்துள்ளதாக குற்றம்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.