கோலாலம்பூர், ஜூலை 12 – மலேசியாவின் முன்னணி வங்கிகள் பயனாளிகளின் வைப்பு நிதி, அடிப்படை கடன் வசதி மற்றும் வட்டி விகிதங்கள் ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளன.
மலேசிய பொருளாதாரத்தில் ஏற்பட்ட புதிய உச்சம் காரணமாக, எதிர்காலத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலேசிய வங்கிகள் இத்தகைய முடிவுகளை எடுத்துள்ளன.
கடந்த மூன்றாண்டுகளில் முதல் முறையாக மலேசிய பொருளாதாரம் புதிய உச்சத்தை நோக்கி பயணிக்கின்றது. இதனை சரியான வழிகளில் பயன்படுத்த முன்னணி வங்கிகள் திட்டமிட்டிருப்பது சிறப்பான ஒன்றாகும் என பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர். தெற்காசிய அளவில் மலேசியா முதல் நாடாக தனது முக்கிய பொருளாதார விகிதங்களில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.
வட்டி விகிதங்களுக்கான இந்த மாற்றங்கள் எதிர்வரும் 16-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மலேசிய மத்திய வங்கி‘ (Bank Negara) தனது ஒவிஆர் (Overnight Policy Rate)-ஐ 25 புள்ளிகள் உயர்த்தி 3.25 சதவீதமாகவும், ‘மலாயன் வங்கி‘ (May Bank) தனது அடிப்படை நிதி விகிதத்தை வருடத்திற்கு 6.60 சதவீதம் முதல் 6.85 சதவீதமாகவும் உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.