பிரேசில், ஜூலை 15 – உலகக் கிண்ணப் போட்டிகளில் அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியுடன் கண்ட 7-1 கோல் கணக்கிலான மோசமான தோல்வி, மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் நெதர்லாந்திடம் 3-0 என்ற கோல் எண்ணிக்கையில் தோல்வி – போன்ற காரணங்களுக்காக பொறுப்பேற்று பிரேசில் காற்பந்து குழுவின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து லூயிஸ் பிலிப் சோலாரி பதவி விலகியுள்ளார்.
அவர் சமர்ப்பித்துள்ள பதவி விலகல் கடிதத்தை பிரேசில் காற்பந்து சங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், பிரேசில் காற்பந்து சங்கத்தின் தொழில் நுட்பக் குழுவையும் அந்த சங்கம் முற்றாக கலைத்துவிட்டது.
65 வயதான சோலாரி, காற்பந்து சங்கத்தின் தலைவர் ஜோஸ் மரியா மரினைச் சந்தித்த பின்னர் அவரது பதவி விலகல் குறித்த அறிவிப்பு பிரேசில் காற்பந்து சங்கத்தின் இணையப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.
சோலாரியின் பயிற்சியாளர் ஒப்பந்தம், இந்த உலகக் கிண்ணப் போட்டிகளோடு ஒரு நிறைவுக்கு வருவதால், பிரேசில் குழுவை மீண்டும் வலுவுள்ளதாக தயார்ப்படுத்தும் நல்ல நோக்கத்தில், பிரேசில் காற்பந்து சங்கத்தின் அனைத்து தரப்புகளும் அந்த ஒப்பந்தத்தை மேலும் நீட்டிப்பதில்லை என்ற முடிவை எடுத்திருக்கின்றன.
எதிர்பார்க்கப்பட்ட உச்சகட்ட வெற்றியை அடையாவிட்டாலும், பிரேசில் குழுவை தயார்ப்படுத்தி அரையிறுதி ஆட்டம் வரை கொண்டு வந்ததற்கு சோலாரிக்கும் அவரது மற்ற பயிற்சியாளர் குழுவினருக்கும் பிரேசில் காற்பந்து சங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
ஏற்கனவே, போர்ச்சுகல் நாட்டிற்கும், இங்கிலாந்தின் செல்சி குழுவிற்கும் பயிற்சியாளராக இருந்துள்ள சோலாரியின் அடுத்த கட்ட பணி குறித்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.