Home உலகம் உலகின் சக்தி வாய்ந்த பயணக் கடப்பிதழ் வரிசையில் 9வது இடத்தில் மலேசியா!

உலகின் சக்தி வாய்ந்த பயணக் கடப்பிதழ் வரிசையில் 9வது இடத்தில் மலேசியா!

770
0
SHARE
Ad

Malaysian Passport கோலாலம்பூர், ஜூலை 15 – உலகில் உள்ள 163 நாடுகளுக்கு விசா எனப்படும் முன் அனுமதி இல்லாமல் பயணம் செல்லக் கூடிய தகுதியை நமது மலேசியப் பயணக் கடப்பிதழ் (பாஸ்போர்ட்) பெற்றுள்ளது.

உலகின் சக்தி வாய்ந்த கடப்பிதழ் என்பது, எந்தக் கடப்பிதழ் மூலம் உலகில் அதிக நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செல்ல முடியும் என்பதை வைத்துக் கணக்கிடப்படுகின்றது.

அந்த வகையில் பிரிட்டன், சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகளின் கடப்பிதழ்கள் உலகின் அதி சக்திவாய்ந்த கடப்பிதழ்களாக கருதப்படுகின்றன. இவற்றின் மூலம் 173 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செல்ல முடியும்.

#TamilSchoolmychoice

இந்த வரிசையில் முதல் பத்து நாடுகளில் மலேசியாவும் மால்டாவும் 9வது இடத்தில் இருக்கின்றன. இந்த இரண்டு நாடுகளின் கடப்பிதழ்களைக் கொண்டு 163 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.

இரண்டாவது இடத்தில் அமெரிக்கா, ஜெர்மனி, லக்சம்பெர்க், டென்மார்க், ஆகிய நாடுகளின் கடப்பிதழ்கள் இருக்கின்றன. இவற்றைக் கொண்டு 172 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செல்ல முடியும்.

ஒரு நாட்டின் உள்நாட்டு அரசியல் நிலைத்தன்மை, உலக அரங்கில் செல்வாக்கு, மற்ற நாடுகளுடனான நல்லுறவு, அரச தந்திர பரிமாற்றங்கள் போன்றவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு நாடும் விசா இல்லாமல் தங்கள் நாடுகளுக்குள் பயணிகளை அனுமதிக்கின்றன.

இந்த வரிசையில், உலகின் சக்தி வாய்ந்த பயணக் கடப்பிதழ்கள் வரிசையில் மலேசியா முதல் பத்து நாடுகளில் ஒன்றாகத் திகழ்கின்றது.

அதனால்தான், நமது நாட்டின் கடப்பிதழ்கள் அடிக்கடி திருடு போகும் சம்பவங்கள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளன.

சில நாடுகளில் உள்ளவர்கள், நமது நாட்டு கடப்பிதழ்களைத் திருடி அவற்றை உருமாற்றி, அவற்றைக் கொண்டு, சில பயணிகளை சட்டவிரோதமாக மற்ற   நாடுகளுக்கு கடத்தும் பணிகளில் ஈடுபடுகின்றனர். காரணம் மலேசியக் கடப்பிதழ் என்றால் குறிப்பிட்ட அந்த நாடுகளுக்குள் விசா இல்லாமல் நுழைந்து விட முடியும்.

அண்மையில் காணாமல் போன எம்.எச்.370 மாஸ் விமான விவகாரத்திலும் இருவர் போலி மலேசிய கடப்பிதழ் மூலம் மலேசியக் குடிநுழைவு சோதனைகளைக் கடந்து சென்றுள்ளது கண்டறியப்பட்டது.

இருப்பினும், மலேசியக் கடப்பிதழ்களில், கைரேகைப் பதிவு மூலம் பயணிகளை அடையாளம் காணும் பையோமெட்ரிக் முறை கொண்டு வந்த பின்னர், மலேசியக் கடப்பிதழ்கள் திருடப்படுவதும், போலியாகப் பயன்படுத்தப்படுவதும் வெகுவாகக் குறைந்துள்ளது.