மாஸ்கோ, ஜூலை 15 – இன்று மாஸ்கோவின் பாதாள இரயில் நிலையத்தில் தவறுதலான சமிக்ஞைகளால் ஏற்பட்ட இரயில்களின் மோதல்களில் இதுவரை 19 பேர் கொல்லப்பட்டதோடு, ஏறத்தாழ 120 பேர் கடுமையான காயங்களுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று காலை அதிகமான பயணிகள் தங்களின் பயணத்தை மேற்கொண்டிருந்த நெரிசல் மிகுந்த நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததால் அதிகமான உயிர்ப்பலி ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த முறை நிகழ்ந்த பாதாள ரயில் விபத்துக்களைப் போன்று இது பயங்கரவாதச் செயல் அல்ல என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இருப்பினும் விபத்துக்கான உண்மையான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
உடனடியாக அவசரப் பிரிவுகள் இயக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன.
திடீரென்று ஏற்பட்ட விபத்தால் பயணிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் காணப்பட்டனர். விபத்து நடந்த இடத்தில், மோதிய இரயில்களின் அடிப்பாகத்தில் இருந்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்டதாகவும், மேலும் சில சடலங்கள் சிக்கிக் கொண்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.
இருப்பினும், உயிர் தப்பிய அனைவரும் விபத்து நடந்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டதாக மாஸ்கோ மாநகர் மன்றத்தில் துணைத் தலைவர் (துணை மேயர்) தெரிவித்துள்ளார்.
மாஸ்கோவின் துரித இரயில் சேவைகள் உலகின் மிகவும் நெரிசலான, பரபரப்பான சேவைகளாகும். வார நாட்களில் ஏறத்தாழ 9 மில்லியன் பயணிகள் வரை இந்த சேவைகளைப் பயன்படுத்துகின்றனர்.
1935ஆம் ஆண்டில் 13 நிலையங்களோடு தொடங்கிய இந்த சேவை, தற்போது விரிவாக்கப்பட்ட மாஸ்கோ மாநகரில் 194 இரயில் நிலையங்களோடு இயங்கி வருகின்றது.