சென்னை, பிப்.20- சிறுதாவூர் பங்களாவுக்கு சென்றுகொண்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவும் அந்த வழியாக நடைபயணம் போய்க்கொண்டிருந்த வைகோவும் நேற்று திடீரென சந்தித்து பேசிக்கொண்டனர்.
டாஸ்மாக் கடைகளை மூட கோரி மதிமுக பொது செயலாளர் வைகோ காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடை பயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று முன்தினம் கோவளத்தில் தொடங்கி அன்று இரவு திருப்போரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
நேற்று காலை திருப்போரூரில் இருந்து மாமல்லபுரம் நோக்கி நடை பயணத்தை தொடர்ந்தார்.
பிற்பகல் 3 மணிக்கு பையனூரில் தனியார் மோட்டார் சைக்கிள் கம்பெனி அருகே வந்தபோது, முதல்வர் ஜெயலலிதாவின் கார் எதிரே வந்தது.
இதை பார்த்த வைகோ வழி விடுவது போல ஓரமாக நின்றார். ஆனால் வைகோவின் அருகே வந்ததும் காரை நிறுத்தசொல்லி, இறங்கினார் ஜெயலலிதா. உடனே வைகோ விரைந்து வந்து ஜெயலலிதாவை பார்த்து கும்பிட்டார். அவர் சிறிது நேரம் ஜெயலலிதாவுடன் உரையாடினார்.
அதன் பிறகு வைகோவிடம் விடைபெற்று ஜெயலலிதா காரில் ஏறி சென்றார். நடைபயணத்தின்போது வைகோவுடன் மாநில பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் மணிமாறன், பாலவாக்கம் சோமு, இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி ஆகியோர் உடனிருந்தனர்.