சென்னை, ஜூலை 16 – சென்னையில் நேற்று நடந்த “மணல் நகரம்” பட இசை வெளியீட்டு விழாவில் “ஒரு தலை ராகம்” படக்குழுவினர் கலந்து கொண்டனர். விழாவில் “மணல் நகரம்” படத்தின் இசையை டி.ஆர் வெளியிட “ஒரு தலை ராகம்” நாயகி ரூபா அதனைப் பெற்றுக் கொண்டார்.
பன்முகத் திறமையாளரான டி.ராஜேந்தர் பேச்சுக்கென்ற தனி ரசிகர் பட்டாளம் உண்டு எனக் கூறினால் அது மிகையாகாது. அதனை நிரூபிப்பது போல், விழாவில் டி.ஆர். பேச எழுந்ததுமே கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது.
முதலில் “ஒரு தலை ராகம்” படக்குழுவினரை வரவேற்று தன் பேச்சைத் தொடங்கினார் டி.ஆர். தொடர்ந்து விழாவில் அவர் பேசியதாவது,”நான் கடந்த 2 நாட்களாக நடந்த நிகழ்ச்சிகளில் பரபரப்பாக பேசினேன். புயல் வீசியது என்றார்கள் இங்கு.
புயலாக வரவில்லை தென்றலாக வீசப் போகிறேன். நான் அளவாகத்தான் சாப்பிடுகிறேன் அளவாகத்தான் பேசுவேன். நான் என்றும் பழையதை மறக்கமாட்டேன். நான் ‘ஒருதலை ராகம்’ எடுத்த மாயவரம் ஏவிசி கல்லூரியை பார்த்தாலே இன்றும் விழுந்து கும்பிடுவேன்.
34 ஆண்டுகளாக இது வரை அங்குபோனது இல்லை. அங்கு இந்த ஆண்டு போகவுள்ளேன். இன்று எல்லாம் மாறி விட்டது. கேட்டால் “ட்ரண்ட்” என்கிறான். அன்று நாகரிகமாக காதல் இருந்தது. இன்று மாறிவிட்டது. “நூன் ஷோவில் பிக் அப் மேட்னியில் பேக் அப்” என்று மாறிவிட்டது.
அன்று கதைக்காகப் படம் எடுத்தார்கள் இன்று சதைக்காகப் படம் எடுக்கிறார்கள். அன்று குத்துப்பாட்டு வைத்தார்கள். இன்று வெத்துப்பாட்டு வைக்கிறார்கள். இன்று தமிழ் சினிமாவில் அம்மா, ஆத்தா, தங்கை பாசத்தை மதிப்பதில்லை.
அப்படி வைத்தால் நாடகம் என்கிறான். ஆனால் ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் இன்றும் அம்மா, ஆத்தா, தங்கை பாசத்தை மதிக்கிறான். இன்று புரிகிற மாதிரி பாட்டு இருக்கக் கூடாது. கேட்டால் “ட்ரண்ட்” என்கிறான்.
நான் 108 குரலில் பேசுவேன் இன்றுவரை சினிமாவில் இருக்கிறேன். என்னையே கிண்டல் செய்கிறான். பலபேர் உன்னைக் கிண்டல் செய்தால் கவலைப்படாதே. உன்னிடம் திறமை இருந்தால் கிண்டல் செய்வான். உன் மேல் பொறாமை இருந்தால் கிண்டல் செய்வான்.
உன்னை யாரும் சட்டை செய்யவில்லை என்றால் நீ சடை என்று அர்த்தம். யாரும் உன்னைக் கிண்டல் செய்தால் கவலைப் படாதே. அன்று’ராகம் தேடும் பல்லவி’யில் சங்கரை நான் ஒரு இயக்குநராக காண்பித்தேன். இன்று அது பலித்து விட்டது.
எனக்கு மலையாளத்தில் படமெடுக்க ஆசை. அங்குதான் கலாச்சாரம் இருக்கிறது. அங்குதான் குடும்பக்கதை ‘திரிஷ்யம்’ ஓடுகிறது. மலையாளத்தில்தான் மம்முட்டி, மோகன்லால், திலீப் என எல்லாரும் வேட்டி கட்டி நடிக்கிறார்கள். இங்கு வேட்டி கட்டி நடிக்கிறார்களா? எல்லாரும் ஜீன்ஸ் போட்டு நடிக்கிறார்கள்” என விழாவில் டி.ஆர் அளவாக உரையாற்றினார்.
டி.ஆர் பேச்சைத் தொடர்ந்து படக்குழுவினரை வாழ்த்தி, அவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கினார் டி.ஆர். டி.ஆர். தனது பேச்சுடனே ஆங்காங்கே பாடியும், குரல் மாற்றிப் பேசியதை பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தது குறிப்பிடத்தக்கது.