சென்னை – அண்மையில் நடைபெற்ற ‘விழித்திரு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் டி.ராஜேந்தர் கலந்து கொண்டு பேசினார்.
வழக்கம் போல் தனது சுய பெருமைகளைப் பேசி அனைவரும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென முன்னதாகப் பேசிய நடிகை தன்ஷிகா தனது பெயரைக் குறிப்பிட மறந்துவிட்டார் என்று கூறி, அந்த மேடையிலேயே தன்ஷிகாவைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
பதற்றம் காரணமாக தான் பெயரைக் குறிப்பிட மறந்துவிட்டதாகவும், அதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் தன்ஷிகா இரண்டு முறை மன்னிப்புக் கேட்டும் கூட, அதனை ஏற்றுக் கொள்ளாத டிஆர், “போய் உட்காருமா நீ.. மேடை நாகரிகம் தெரிசுக்க”, “சேலை கட்டிட்டு வந்து சாரி சொல்லு”, “நீயெல்லாம் என் பெயரைச் சொல்லியா நான் பெரிய ஆளாகப் போறேன்?”, “உன் மதிப்ப எந்த மார்கெட்டுல கொண்டு போய் விற்க?” போன்ற மிகக் கடுமையான வார்த்தைகளால் தன்ஷிகாவை அவமதித்தார். இதனால் தன்ஷிகா மேடையிலேயே கண்ணீர் சிந்தினார்.
அதன் பின்னர், திடீரென தான் இந்தப் படத்தை அனைவரும் திரும்பிப் பார்க்க வைப்பதற்காகவே அவ்வாறு தன்ஷிகாவிடம் பேசியதாக திடீர் பல்டி அடித்தார்.
டிஆரின் இந்த அட்டூழியம் இணையவாசிகள் பலரையும் முகம் சுளிக்க வைத்ததோடு, டிஆருக்கு எதிராகக் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரான விஷால், டிஆரின் இந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை விட்டிருக்கிறார்.
தனது அடுக்குமொழிப் பேச்சாலும், சர்ச்சைக்குரிய பேச்சுகளாலும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் டிஆர் இவ்வாறு ஒரு நடிகையை அவமதித்தது மிகவும் தவறு என்றும் விஷால் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.