கோலாலம்பூர் – மலேசியாவின் கார் உற்பத்தி நிறுவனமான புரோட்டோன் நிறுவனத்திற்கு புதிய தலைமைச் செயல் அதிகாரியாக சீனாவைச் சேர்ந்த டாக்டர் லீ சுன்ரோங் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரது நியமனம் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமுலுக்கு வருகிறது.
சுமார் 30 ஆண்டுகால அனுபவத்தை கார் தொழில் துறையில் லீ சுன்ரோங் கொண்டிருக்கிறார்.
அரசாங்கத் தொடர்புடைய நிறுவனங்களில் வெளிநாட்டவரை முதன்மைச் செயல் அதிகாரிகளாக நியமித்து அதன் மூலம் தேவையற்ற உள்நாட்டு அரசியல் தலையீடுகளைத் தவிர்க்கும் போக்கை அண்மையக் காலமாக மலேசிய அரசாங்கம் கடைப்பிடித்து வருகிறது.
1983-இல் அப்போதைய பிரதமர் துன் மகாதீரால் தோற்றம் கண்ட புரோட்டோன் நிறுவனத்திற்கு வெளிநாட்டவர் ஒருவர் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.
பதவி விலகிச் செல்லும் டத்தோ அகமட் புவான் கெனாலிக்குப் பதிலாக லீ நியமிக்கப்பட்டிருக்கிறார். பல்வேறு கார் நிறுவனங்களில் பதவிகள் வகித்த அனுபவங்கள் கொண்டவர் லீ.
புரோட்டோன் கார் நிறுவனத்தில் புதிய முதலீட்டாளராக இணைந்துள்ள சீனாவின் ஸீஜியாங் கீலி ஹோல்டிங்ஸ் நிறுவனம் சார்பாக புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் பெற்றிருக்கும் லீ சுன்ரோங், அடுத்து வரும் ஆண்டுகளில் புரோட்டோன் நிறுவனத்தை வெற்றிகரமான வணிக நிறுவனமாக மாற்றியமைக்கும் திட்டங்களையும் தான் கொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறார்.
ஏற்கனவே, மலேசிய அரசாங்க முதலீட்டில் இயங்கி வரும் மாஸ் விமான நிறுவனத்திற்கும் வெளிநாட்டவர் ஒருவர் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.