இந்த மாநிலங்களில் இந்த காய்ச்சலுக்கு ஏராளமானோர் பலியாகினர். கேரளாவில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து, தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு இறைச்சி கோழிகள் கொண்டு செல்ல சில மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து பறவை காய்ச்சலை கட்டுபடுத்த கேரள சுகாதார துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் பயனாக இந்த காய்ச்சல் அங்கு கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்த நிலையில் இரண்டு வருடங்களாக தலை காட்டாமல் இருந்த பறவை காய்ச்சல் தற்போது அங்கு வேகமாக பரவி வருகிறது.
பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அங்கு கடும் பீதி நிலவுகிறது. இதையடுத்து இந்த நோயை கட்டுபடுத்த கேரள சுகாதார துறை மீண்டும் களம் இறங்கியுள்ளது.
கேரளாவின் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் பறவை காய்ச்சல் பரவி வருவதால் அங்கிருந்து வரும் இறைச்சி கோழிகள் உள்பட பல்வேறு பொருட்களுக்கு தடை விதிப்பது குறித்து கேரள அரசு ஆலோசித்து வருகிறது.