கோலாலம்பூர், ஜூலை 19 – மலேசியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பங்குகள், தொடரும் பேரிடர் சம்பவங்களால், இதுவரை இல்லாத அளவில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.கடந்த மார்ச் மாதம் 239 பயணிகளுடன் மாயமான மாஸ் விமானம் எம்எச் 370 பற்றி எந்தவொரு தகவல்களும் இதுவரை கிடைக்காத நிலையில், நேற்று முன்தினம் நெதர்லாந்தில் இருந்து வந்த எம்எச் 17 என்ற விமானம் உக்ரைனில் போராளிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.298 பேரை பலிவாங்கிய இந்த பேரிடர் ஒட்டுமொத்த மலேசியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.தொடர் பேரிடர்களால் மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகள், நேற்று காலை முதலே சரியத் தொடங்கின. வர்த்தகம் முடியும் தருவாயில் பங்குகள் 17.8 சதவீதமாக சரிந்தது.
அப்போது அந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 0.190 ரிங்கிட்டாக இருந்தது. பின்னர் சற்று உயர்ந்து வர்த்தக முடிவில் ஒரு பங்கின் விலை 0.200 ரிங்கிட் என்ற நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.