கோலாலம்பூர், ஜூலை 19 – இந்திய தொழில்நுட்பச் சந்தைகளில் பெரும் வர்த்தகப் புரட்சியை நடத்த கூகுள் ஆயத்தமாகி வருகின்றது.
கடந்த சில வருடங்களில் திறன்பேசிகளின் அசுர வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தது கூகுள் நிறுவனத்தின் அண்டிரோய்டு இயங்கு தளம். வர்த்தக ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் பெரும் புரட்சியை ஏற்படுத்திய அண்டிரோய்டு திறன்பேசிகளின் வர்த்தகத்தை இந்திய சந்தைகளில் அதிகரிக்க கூகுள் நிறுவனம், சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் பெரும் திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது.
ஆசிய அளவில் மிகப் பெரிய வர்த்தகச் சந்தையாக திகழும் இந்தியாவில், திறன்பேசிகளின் வர்த்தகம் முன்னேற்றம் கண்டிருந்தாலும், குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. இதனை கருத்தில் கொண்டு கூகுள், மிக குறைந்த செலவில் பல்வேறு வசதிகளைக் கொண்ட திறன்பேசிகளை உருவாக்க இந்தியாவின் முக்கிய செல்பேசிகள் தயாரிப்பு நிறுவனங்களான மைக்ரோமேக்ஸ், கார்பன் போன்றவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
இதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக கூகுளின் மூத்த துணை தலைவர் சுந்தர் பிச்சை எதிர் வரும் அக்டோபர் மாதத்தில் இந்தியாவிற்கு வர முடிவு செய்துள்ளார்.
‘அண்டிரோய்டு ஒன்’ (Android One) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் படி இந்திய நிறுவனங்களுடன் சேர்ந்து, சுமார் 100 அமெரிக்க டாலர்களுக்கு திறன்பேசிகளை உருவாக்க, கூகுள் திட்டமிட்டுள்ளது.
மிக குறைந்த செலவில் உருவாக்கப்படும் அந்த திறன்பேசிகளின் செயலிகள் அனைத்தும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பெறுவதற்கான முயற்சிகளும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.