பெங்களூர், ஜூலை 24 – சொத்து குவிப்பு வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட நல்லம்ம நாயுடு சுதந்திரமாக செயல்படாமல், ஆட்சியாளர்களால் இயக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குற்றம்சாட்டினார்.
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிநீதிமன்றத்தில் நீதிபதி ஜான்மைக்கல் டிகுணா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார் 25வது நாளாக தனது இறுதிவாதத்தை தொடர்ந்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “பொதுவாக ஒருவர் மீது புகார் கூறினால், அதை முழுமையாக விசாரணை நடத்திய பின், முதல் விசாரனை அறிக்கை பதிவு (எப்.ஐ.ஆர்.) செய்ய வேண்டும்.
ஆனால், எனது கட்சிக்காரர் மீதான புகாரை முழுமையாக விசாரிக்காமல் முதல் விசாரனை அறிக்கை பதிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் எஸ்.பி. நல்லம்ம நாயுடுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தின்படி சுதந்திரமாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் அதிகாரம் உள்ளது.
ஆனால், வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்ட தேவராஜன் முதல் அனைத்து அரசு தரப்பு சாட்சிகள் கொடுத்த வாக்குமூலத்தையும் வழக்கறிஞர் ராகவன் உதவியுடன் மாதிரி குற்றப்பத்திரிக்கையாக தயாரித்து,
அதை மூத்த வழக்கறிஞர் நடராஜனிடமும், அப்போது அரசு வழக்கறிஞராக இருந்த சண்முகசுந்தரத்திடமும் காட்டி, அவர்கள் சரியாக இருக்கிறது என்று ஒப்புதல் பெற்ற பிறகே நீதிமன்றத்தில் நல்லம்ம நாயுடு தாக்கல் செய்துள்ளார்.
நான் ஆரம்பத்தில் சொன்னதைபோல், இது முழுக்க முழுக்க அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கத்தில் தொடரப்பட்ட வழக்கு என்பதற்கு, விசாரணை அதிகாரி சுதந்திரமாக செயல்படாமல், அப்போதைய ஆட்சியாளர்களின் ஆலோசனைபடி செயல்பட்டுள்ளதின் மூலம் உறுதியாக தெரிகிறது என குமார் வாதிட்டார்.
ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார் கடந்த மாதம் 19-ம் தேதி தனது இறுதிவாதத்தை தொடங்கினார். நேற்று வரை விடுமுறை நாட்கள் கழித்து 25 நாட்களில் 80 மணி நேரம் அவர் வாதம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘‘கடந்த 25 நாட்களாக நான் செய்த வாதம் திருப்தி அளிக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்து வாதிடும் பொறுப்பை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
அவரின் நம்பிக்கையை வீணாக்காத வகையில் மனநிறைவுடன் வாதம் செய்துள்ளேன்’’ என்றார். இன்று முதல் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலா சார்பில் வழக்கறிஞர் மணிசங்கர் வாதத்தை தொடங்குகிறார்.