காசா, ஜூலை 25 – காசாவில் உள்ள பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய வான் வழி தாக்குதலில் 15 பேர் பலியானார்கள்.
காசாவை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதால் இப்பள்ளியில் ஏராளமான பொதுமக்கள் இடம்பெயர்ந்து தங்கியிருந்தனர்.
இச்சூழ்நிலையிலேயே அப்பள்ளி கட்டிடத்தின் மீது, இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. பாலஸ்தீன சுகாதார அமைச்சர் இது குறித்து கூறுகையில், பெயிட் ஹனோன் என்ற இடத்தில் உள்ள இப்பள்ளியில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தில் 15 பேர் பலியானதுடன், ஏராளமானோர் படுகாயமடைந்ததாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து இஸ்ரேல் தரப்பில் எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. இது போன்று பள்ளி வளாகத்தில் தாக்குதல் நடத்துவது இது முதல் முறை அல்ல.
ஏற்கனவே இரு முறை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காசாவிலுள்ள 83 பள்ளிகளில் 1,40,000 மக்கள் தங்கியிருப்பதாக ஐ.நா. நிவாரண குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.