மாட்ரிட், ஜூலை 25 – நடந்து முடிந்த உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் கொலம்பியாவின் முன்னணி ஆட்டக்காரராக முத்திரை பதித்த 23 வயது ஜேம்ஸ் ரோட்ரிகுயஸ், தற்போது புகழ்பெற்ற ஸ்பெயின் நாட்டு காற்பந்து குழுவான ரியல் மாட்ரிட்டுக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கான ஒப்பந்தத் தொகை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அந்த ஒப்பந்தத்தின் அளவு 75 மில்லியன் முதல் 80 மில்லியன் ஈரோ வரை (ஏறத்தாழ 321 மில்லியன் முதல் 342 மில்லியன் ரிங்கிட் வரை) இருக்கலாம் என ஸ்பெயின் நாட்டு பத்திரிக்கைகள் கோடி காட்டியுள்ளன.
இதன் மூலம் காற்பந்து உலக சரித்திரத்தில் மிக விலையுயர்ந்த விளையாட்டாளர்களில் ஒருவராக ஜேம்ஸ் உருவாகியுள்ளார்.
தங்கக் காலணி வெற்றியாளர்
உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் ஜேம்ஸ் 6 கோல்கள் அடித்து,‘கோல்டன் பூட்’(Golden Boot) எனப்படும் தங்கக் காலணி பரிசைப் பெற்றார்.
இந்த புதிய ஒப்பந்தத்தின்படி ஜேம்ஸ் ஆறு ஆண்டு காலத்திற்கு ரியல் மாட்ரிட்டுக்காக விளையாடுவார்.
இதற்கு முன்பு அவர் கடந்த ஓராண்டாக பிரான்ஸ் நாட்டின் மொனாக்கோ குழுவிற்கு விளையாடி வந்தார்.
ரியல் மாட்ரிட்டுக்கான ஒப்பந்தத்தின் மூலமாக தற்போது நடப்பில் உள்ள உலகின் விலையுயர்ந்த காற்பந்து விளையாட்டாளர்களில் நான்காவது இடத்திற்கு ஜேம்ஸ் ரோட்ரிகுயஸ் உயர்ந்துள்ளார்.
ரியல் மாட்ரிட்டுக்காக விளையாடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கேரத் பேல், பார்சிலோனாவுக்காக விளையாடும் லூயிஸ் சுவாரஸ் ஆகியோர் முதல் மூன்று நிலையிலான விலையுயர்ந்த விளையாட்டாளர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.