Home கலை உலகம் “ஜிகர்தண்டா” வெளியீடு ஒத்திவைப்பால், சித்தார்த்துக்கும் தயாரிப்பாளருக்கும் மோதல்

“ஜிகர்தண்டா” வெளியீடு ஒத்திவைப்பால், சித்தார்த்துக்கும் தயாரிப்பாளருக்கும் மோதல்

824
0
SHARE
Ad

Jigarthanda movie posterசென்னை, ஜூலை 26 – சித்தார்த் நடிப்பில் உருவாகி பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஜிகர்தண்டா திரைப்படம் நேற்று ஜூலை 25ஆம் தேதி வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால், அதன் படத் தயாரிப்பாளர் கதிரேசன் படத்தின் வெளியீட்டு தேதியை படக் குழுவினருக்கோ, படத்தை இயக்கியவருக்கோ, கதாநாயகனாக நடித்த சித்தார்த்துக்கோ தெரியப்படுத்தாமல் ஜூலை 25 -லிருந்து ஆகஸ்ட் 1-க்கு மாற்றிவிட்டார்.

தயாரிப்பாளரின் இந்த முடிவை தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக கண்டித்திருந்தார் நடிகர் சித்தார்த்.

சித்தார்த்தின் இந்த கடும் கண்டனத்துக்கு பதிலாக கதிரேசன் விளக்கக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

தயாரிப்பாளர் கதிரேசனின் விளக்கம்

அதில் அவர் பின்வருமாறு தெரிவித்திருக்கின்றார்:-

“நான் என்னுடைய நிறுவனம் சார்பாக தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம், நய்யாண்டி படங்களை தயாரித்திருக்கிறேன். சுமார் 50 படங்களை விநியோகித்தும், 200 படங்களின் பாடல் குறுந்தகடுகளை வெளியிட்டுமிருக்கிறேன். அத்துடன் ஏறக்குறைய 100 படங்களின் வெளிநாட்டு உரிமைகளின் பொறுப்பையும் ஏற்றிருக்கிறேன். கடந்த 20 ஆண்டுகளில் நேர்மையான முறையில் படங்களை விநியோகித்து என்னுடைய நிறுவனத்திற்கு இந்த சினிமாத் தொழிலில் நல்ல பெயரை வாங்கியுள்ளேன்”.

Sitharth Actor“நான் சித்தார்த்தின் ஜிகர்தண்டாவில் அதிக பணத்தை முதலீடு செய்துள்ளேன். ஒவ்வொருமுறை படத்தை வெளியிட முயலும் போதும் விஜய், அஜீத் படமோ இல்லை கோச்சடையானோ வந்துவிடுவதால் நான் ரிஸ்க் (பலப்பரிட்சை) எடுக்க விரும்பவில்லை. எந்த தயாரிப்பாளரும் பொருளாதார பிரச்சனைகளை சமாளிக்க தன்னுடைய படத்தை எவ்வளவு விரைவில் வெளியிட முடியும் என்றுதான் விரும்புவார்கள். தேவையில்லாமல் யாரும் தங்களின் படத்தை தள்ளி வைப்பதில்லை.

தனுஷின் விஐபி (வேலை இல்லாத பட்டதாரி) வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் கருத்து என்னவென்றால் ஒருவாரம் கழித்து ஜிகர்தண்டா வெளியானால் நிறைய திரையரங்குகள் கிடைக்கும், வசூலும் அதிகமாக இருக்கும். ஜிகர்தண்டா என்னுடைய குழந்தை. யார் தன்னுடைய சொந்த குழந்தையையே கொல்ல‌த் துணிவார்கள்? ஏன் சித்தார்த் இதனை புரிந்து கொள்ளவில்லை?”

– என்று தயாரிப்பாளர் கதிரேசன் தனது கடிதத்தில் சித்தார்த் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து குறிப்பிட்டுள்ளார்.

ஒரு படத்துக்கு யார் பொறுப்பு?

இந்த விளக்கத்தைத் தொடர்ந்து மற்ற தயாரிப்பாளர்களான கலைப்புலி தாணு, சத்யஜோ‌தி தியாகராஜன், டி.சிவா, சித்ரா லக்ஷ்மணன், ஹெச்.முரளி உள்ளிட்ட பல தயாரிப்பாளர்கள் கூட்டாக சித்தார்த்தின் பொறுப்பற்ற தன்மையை கண்டித்துள்ளனர்.

படக் கதாநாயகன் சித்தார்த் – தயாரிப்பாளர் மோதலினால் உண்மையில் யார் பொறுப்பற்றவர்? பட வெளியீட்டில் யாருக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் – யாருக்கு அக்கறையும் பொறுப்பும் இருக்க வேண்டும் என்பது போன்ற கேள்விகள் திரையுலகினரை ஆக்கிரமித்துள்ளன.

“கதிரேசன் ஜிகர்தண்டாவை தன்னுடைய குழந்தை என்கிறார். பணம் போட்டவருக்கு படம் குழந்தை என்றால் அதனை உருவாக்கிய கார்த்திக் சுப்புராஜுக்கு அது குழந்தையில்லையா? அவரிடமும், படத்தில் நடித்த சித்தார்த்திடமும் மற்றும் படத்தில் பணியாற்றிய யாரிடமும் தகவல் அறிவிக்காமல் தன்னிச்சையாக படத்தின் வெளியீட்டு தேதியை கதிரேசன் மாற்றியதற்கு என்ன பெயர்? பணம் போட்ட எனக்குதான் – எனக்கு மட்டும்தான் படம் சொந்தம் என்ற ஆணவத்தின் வெளிப்பாடுதானே இந்த செயல்?” என ஒரு சாரார் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தயாரிப்பாளர்களோ, கதிரேசனுக்கு ஆதரவாக,ஒன்றுகூடி சித்தார்த்தை கண்டித்திருக்கிறார்கள்.

தயாரிப்பாளர் கதிரேசன் தான் முன்பு தயாரித்த படங்களின் கதாநாயகன் தனுஷ் என்பதால், அந்த நட்பின் காரணத்தாலும் ஜிகர்தண்டாவை ஒத்தி வைத்திருக்கலாம் என்கின்றார்கள்.

தனுஷின் படம் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால், இப்போது ஜிகர்தண்டாவை வெளியிட்டால், வேலை இல்லாத பட்டதாரி படத்தின் வசூலும் பாதிப்படையக் கூடும் – அதே வேளையில் ஜிகர்தண்டாவின் வசூலும் பாதிப்படையக் கூடும் என்ற எண்ணத்தில் – தனுஷூடன் இருக்கும் நட்பின் காரணமாகத்தான் கதிரேசன் ஜிகர்தண்டாவை ஒத்திவைத்திருக்கின்றார் என்கின்றார்கள்.

எது எப்படியிருப்பினும் படம் நன்றாக ஓடி விட்டால் எல்லாரும் இராசியாகி ஒன்றாக இணைந்து கூடிக்கொள்வார்கள் என்பது மட்டும் நிச்சயம்.