வாஷிங்டன், ஜூலை 26 – உலக பொருளாதார நிதியம் உலக நாடுகளுக்கான தற்போதைய மற்றும் 2015-ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி பற்றிய கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆசிய அளவில் இந்தியா மட்டுமே அடுத்த ஆண்டு முழுமையான பொருளாதார வளர்ச்சி பெரும் என்று அந்த அறிக்கை கணக்கிட்டுள்ளது.
உலக அளவில் விமான விபத்துகள் மற்றும் போர் பதற்றங்கள் காரணமாக, கச்சா எண்ணெய், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி உட்பட பல்வேறு வர்த்தக அடிப்படை கூறுகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
தற்போதைய நிலையில், இவ்வாண்டிற்கான வளர்ச்சி சதவீதம் 3.4 ஆகவும், எதிர்வரும் 2015-ம் ஆண்டில் 4 சதவீதமாகவும் முன்னேற்றம் இருக்கும் என்று கூறியுள்ளது. இந்த வளர்ச்சி எதிர்பார்த்த அளவில் பெரிய முன்னேற்றம் இல்லை என்றாலும், அடுத்த வருடத்திற்குள் படிப்படியாக முன்னேற்றம் காணும் என்றும் அறிவித்துள்ளது.
ஆசியாவில் இந்தியாவின் வளர்ச்சி தற்போதைய ஆளும் பா.ஜ.க அரசின் தேர்தல் வெற்றிக்குப் பின் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளதாகவே அறிவித்துள்ளது. 2015-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.4 சதகவீதம் ஆகவும், அதற்கு அடுத்த வருடத்தில் 6.4 சதவீதமாகவும் உயர வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகின்றது என அறிவித்துள்ளது.
பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா மட்டுமே ஐஎம்எப்-ன் நேர்மறையான கணிப்புகளைப் பெற்றுள்ளது. உலகின் முன்னணி நாடான அமெரிக்காவிற்கு புவி சார் அரசியல் நெருக்கடிகள் அதிகரித்துள்ளதாகவும், வேலைவாய்ப்புகள் உட்பட அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று ஐஎம்எப் கூறியுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி சதவீதம் இந்த வருடத்தில் 3.25 சதவீதமாகவும், 2015-ல் 0.25 சதவீதம் குறைந்து, 3 சதவீதமாக வாய்ப்புள்ளது என அந்த அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.