கீவ், ஜூலை 26 – உக்ரைன் நாட்டின் தற்போதய பிரதமர் அர்செனி யட்சென்யுக் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ரஷ்ய ஆதரவு போராட்டக்காரர்களால் கடும் நெருக்கடிகளை சந்தித்து வரும் உக்ரைன் நாட்டிற்கு அவரின் இந்த பதவி விலகல் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் வான் பரப்பில் மலேசிய விமானம் எம்எச் 17 சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து உலக நாடுகள் உக்ரைன் மற்றும் ரஷ்யா அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றன.
மேலும், ஐ.நா. சபையும் விமானம் வீழ்த்தப்பட்டது தொடர்பாக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படும் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
இந்நிலையில் உக்ரைன் இராணுவத்தின் இரண்டு போர் விமானங்கள் சவூர் மோகிலா பகுதியில் போராட்டக்காரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.
ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தங்கள் நிலைகளை விட்டு வெளியேறி, முக்கிய நகரமான டொனெட்ஸ்க் நகரின் மத்திய பகுதியை நோக்கி முன்னேறி வருகின்றனர். இதனால் கடந்த இரண்டு தினங்களாக கடும் சண்டை நடைபெற்று வருகின்றது.
உலக அளவில் பெரும் இராணுவ வலிமை பெற்றுள்ள ரஷ்யாவும் உக்ரைன் தொடர்பான தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவதாக இல்லை. போராட்டக்காரர்களை ஆதரித்தும் நவீன ஆயுதங்களை வழங்கியும் தனது எதிர்ப்பை மறைமுகமாக காட்டி வருகின்றது.
இந்நிலையில் உக்ரைன் பிரதமர் அர்செனி யட்சென்யுக் தனது பதவியை ரஜினாமா செய்துள்ளது, அந்நாட்டிற்கு அரசியல் ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றன.