டெல்லி, ஜூலை 30 – காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 9 தங்கம் உட்பட 32 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது இந்திய அணி. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்தது.
ஆடவருக்கான 57 கிலோ எடைப்பிரிவு ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் அமித் குமார் தங்கம் வென்றார். தங்கப் பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் நைஜீரிய வீரர் வெல்சனை அமித் குமார் எதிர்கொண்டார். 6-2 என்ற கணக்கில் அமித் குமார் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.
50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதே பிரிவில் ககன் நரங் வெண்கலம் வென்றார்.
இறுதிச்சுற்றில் ராஜ்புத் 436.8 புள்ளிகளும், ககன் நரங் 423.3 புள்ளிகளும் பெற்றனர். இப்பிரிவில் 452.9 புள்ளிகள் பெற்ற இங்கிலாந்து வீரர் டேனியல் ரிவர்ஸ் தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார்.
இதேபோல் 48 கிலோ எடைப்பிரிவு பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் தங்கம் வென்றார். இறுதிப் போட்டியில் இவர் இங்கிலாந்தின் யானா ரட்டிகனை 11-8 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார்.
இதன் மூலம் 9 தங்கம், 14 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 32 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
101 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 93 பதக்கங்களுடன் இங்கிலாந்து 2-வது இடத்திலும், கனடா 39 பதக்கங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.