கிளாஸ்கோ, ஆகஸ்ட் 1 – 20-வது முறையாக இவ்வாண்டு கிளாஸ்கோவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 3 வரை நடைப்பெற்று வருகிறது. மலேசியாவை பிரதிநிதித்து விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் நம் நாட்டிக்கு பெருமை சேர்க்க அப்போட்டிகளில் தங்களால் இயன்றளவு போராடி வருகின்றனர்.
இருப்பினும், காமன்வெல்த் போட்டி விளையாட்டுகள் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள வேளையில், மலேசியாவின் 7 தங்க பதக்கம் வாங்க வேண்டும் என்ற இலக்கு நிறைவேறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் மலேசிய இதுவரை 4 தங்க பதக்கங்களையே வென்றுள்ளது. இதன் முதல் தங்க பதக்கத்தை ஆண்களுக்கான 69 கிலோ எடை தூக்கும் பிரிவில் முகமட் ஹாபிபி பெற்றுத் தந்தார்.
பின், ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவில் உலக வீராங்கனையான டத்தோ நிக்கோல் டேவிட் மலேசியாவிற்கு 2வது தங்கத்தைப் பெற்றுத் தந்தார். மலேசியாவின் பூப்பந்து குழுவினர் 3-வது தங்கத்தைப் பெற்றனர்.
இந்நிலையில், ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் மலேசியாவுக்கு 4வது தங்கம் கிடைத்தது. மேலும், பூப்பந்து விளையாட்டிலும் தங்கம் கிடைக்க வாய்ப்புள்ளது என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
குறிசுடுதல், நீச்சல் விளையாட்டு மற்றும் சைக்கிளோட்டத்திலும் மலேசியாவிற்கு தங்கம் கிடைக்கும் என்ற கனவு நினைவேறாமல் போனது பெரிய ஏமாற்றம்.
இதனால் 7 தங்க பதக்கத்தைப் பெற வேண்டும் எனும் இலக்கை அடைய சற்று சிரமமே என்று மலேசிய விளையாட்டு மன்றத் தலைவர் டத்தோ சூல்கிப்லி எம்போங் தெரிவித்தார்.
தற்போது மலேசியா, கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டி பதக்கப்பட்டியலில் 4 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் பதக்கங்களோடு 13வது இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடத்தை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் கனடா கைப்பற்றியுள்ளது.
இதனிடையே, 2010 புதுடில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் மலேசியா 10 தங்கம், 13 வெள்ளி, 12 வெண்கல பதக்கங்களை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.