கோலாலம்பூர், ஆகஸ்ட் 2– எம்எச்17 விமானப் பேரிடரில் உயிரிழந்த மலேசியர்களின் உடல்களை மலேசியாவிற்கு கொண்டு வரும் நாளன்று, அந்நாளை நாட்டு மக்கள் அனைவரும் துக்கம் அணுசரிக்கும் நாளாக கருத வேண்டும் என்று பிரதமர் நஜிப் துன் ரசாக் கேட்டுக் கொண்டார்.
அக்கோர சம்பவத்தில் உயிர் இறந்தவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் அத்துக்கம் அணுசரிக்கும் நாள் அமையும் என்று நேற்று முன்தினம் இரவு ஆம்ஸ்டெர்டாமில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு விசாரணைக் குழு உறுப்பினர்களோடு உணவு உண்ணும் நிகழ்வில் கலந்துக் கொண்ட பிரதமர் கூறினார்.
கடந்த ஜுலை 17 –ம் தேதி ஆம்ஸ்டெர்டாமிலிருந்து கோலாலம்பூர் நோக்கி வந்த எம்எச்17 விமானம், கிழக்குஉக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. உலக மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய அச்சம்பவத்தில், அவ்விமானத்தில் பயணித்த 283 பயணிகளும் 15 விமான ஊழியர்களும் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
மேலும், இவ்விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டத்தில் 195 டச்சுக்காரர்கள் உயிர் இழந்துள்ளனர். ஆயினும், இச்சம்பவம் தொடர்பாக நெதர்லாந்து அரசாங்கம் மலேசியாவையோ அல்லது மாஸ் நிறுவனத்தையோ குறை சொல்லவில்லை. நிலைமையை புரிந்துக் கொண்டு மலேசியாவிற்கு ஆறுதல் கூறினர் என்று நஜிப் தெரிவித்தார்.
இதனிடையே, நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடேவிடம், மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்ட பின் ஹில்வெர்சும் சென்று அடையாளங்காணப்பட்ட எம்எச்17-ல் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
எம்எச்17 பேரிடர் நடந்து இத்தனை நாட்கள் ஆகியும் இன்று வரை யார் அச்சம்பவதிற்கு காரணமாக இருந்தார்கள் எனும் கேள்விக்கு உறுதியான விடை காண முடியவில்லை.
மலேசிய அரசாங்கம் இச்சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டிப்பாக நீதிக்கு முன் நிறுத்தும். கண்டுபிடிக்கப்பட்ட 2 கறுப்பு பொட்டிகளில் இருக்கும் ஆதாரங்கள் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு உதவி புரியும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.