“அங்கு நிலைமை சரியாக இருந்தால், மலேசிய அதிகாரிகள், நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு செல்வார்கள்” என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.
“கார்கிவிலிருந்து நான்கு மணி நேர பயணத்தில் இருக்கும் சொலெடார் எனும் இடத்திற்கு, இரவு 7 மணியளவில் (மலேசிய நேரம்) 21 பேர் கொண்ட மலேசிய அதிகாரிகள் குழு செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று சாஹிட் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
சொலேடார் என்ற இடத்திலிருந்து 1 மணி நேர பயணத்தில் விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தை அடைந்துவிடலாம் என்பதால், மலேசிய அதிகாரிகள் இன்று அந்த இடத்திற்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த விவகாரத்தில் அனைத்துலக பாதுகாப்பு குழுவிற்கு மலேசிய முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் சாஹிட் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜுலை 17-ம் தேதி, ஆம்ஸ்டெர்டாமிலிருந்து கோலாலம்பூரை நோக்கி வந்த மலேசியா ஏர்லைஸ் எம்எச்17 விமானம், கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் ஏவுகணை தாக்குதல் நடத்தி வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தில் பயணம் செய்த 283 பயணிகள் மற்றும் 15 விமானப் பணியாளர்கள் உயிரிழந்தனர்.