கோலாலம்பூர், ஆகஸ்ட் 5 – இந்தியாவுக்கு வெளியே தமிழ்ப்படங்களை அதிக அளவில் ஆர்வத்துடன் தயாரித்து வெளியிடும் நாடு என்றால் நமது மலேசியாதான்.
இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் அவ்வப்போது தமிழ்ப் பட தயாரிப்பு முயற்சிகள் செயல் வடிவம் கண்டாலும், நேரடியாக தமிழ்ப் படங்களைத் தயாரித்து, திரையரங்குகளில் துணிச்சலுடன் வெளியிடும் போக்கு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றது.
அந்த வகையில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆகஸ்ட் 7ஆம் தேதி, மலேசியாவின் பெரும்பாலான திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘மைந்தன்’ மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராக, ஆஸ்ட்ரோவும் தனது துணை நிறுவனமான ஆஸ்ட்ரோ ஷா (Astro Shaw) மூலம் இணைந்திருப்பது எதிர்காலத்தில் உள்நாட்டு தமிழ்ப்பட வளர்ச்சிக்கு ஒரு வாய்ப்பாக கதவுகளைத் திறந்திருக்கின்றது.
‘அப்பளம்’ படத்திற்குப் பிறகு ஆஸ்ட்ரோ ஷா நிறுவனம் தயாரிப்பில் இணைந்திருக்கும் படம் மைந்தன்.
ஆஸ்ட்ரோவின் ஏற்பாட்டில் செல்லியல் தகவல் ஊடகத்திற்கென நடைபெற்ற பிரத்தியேக நேர்காணலில் மைந்தன் படத்தின் இயக்குநர் சி.குமரேசன், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள டிஎச்ஆர் புகழ் புன்னகைப்பூ கீதா, பிரபல பாடகி ஷைலா நாயர் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் அனுபவங்களையும் படத்தின் சிறப்புக்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்டனர்.
‘மிரட்டியுள்ள’ இயக்குநர் சி.குமரேசன்
பல மலாய்ப் படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் பணியாற்றி அனுபவம் பெற்ற சி.குமரேசன் முதன் முதலாக, இயக்கி, நடித்திருக்கும் தமிழ்ப்படம் ‘மைந்தன்’.
படத்தின் முன்னோட்டமே (டிரெய்லர்) இரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதோடு, படத்தைப் பார்க்கும் ஆவலையும் தூண்டியுள்ளது.
படத்தின் கதாநாயகனாகவும் நடித்திருக்கும் குமரேசன், இந்தப் படத்தில் இரண்டு பிரபலங்களை தன்னுடன் கதாநாயகிகளாக இணைத்து நடித்திருக்கின்றார்.
டிஎச்ஆர் வானொலி மூலம் மலேசிய இரசிகர்களை குரல்வழி கொள்ளை கொண்ட புன்னகைப் பூ கீதா இப்போது மைந்தன் திரைப்படத்தின் வழியாக கதாநாயகி அவதாரம் எடுத்திருக்கின்றார்.
மற்றொரு கதாநாயகி பிரபல பாடகி ஷைலா நாயர். தனது இனிமையான குரல் மூலம் பல்வேறு மேடை நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் என பாடல்களால் பிரபலமான ஷைலாவும் இந்தப் படத்தில் மற்றொரு கதாநாயகியாக நடித்திருக்கின்றார்.
இவர்களைத் தவிர பிரபல மலேசியப் பாடகர்களான டார்க்கி, சீஜே, ராபிட் மேக், டிஎச்ஆர் வானொலி புகழ் உதயா, விக்கி நடராஜா மற்றும் பல உள்நாட்டு நட்சத்திரங்களும் இந்தப் படத்தில் குமரேசனுடன் கைகோர்த்துள்ளனர்.
படத்தின் முன்னோட்டத்தை வெளியிடும் நிகழ்வில் பேசிய பிரபல தமிழக இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி ‘மைந்தனில் குமரேசன் மிரட்டியிருக்கின்றார்’ என பாராட்டு மழை பொழிந்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இசை-பாடல் வெளியீடு
இந்தப் படத்தின் மற்றொரு வித்தியாச அம்சம் இதன் இசை-பாடல் குறுந்தட்டு வெளியீட்டு விழா சென்னையில் பிரபல சினிமா நட்சத்திரங்களின் முன்னிலையில் வெளியிடப்பட்டதுதான்.
இதன் காரணமாக, மைந்தன் தமிழ் நாட்டிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
அதன் சாத்தியம் குறித்து குமரேசனிடம் கேட்டபோது “ஒரே நேரத்தில் தமிழ் நாட்டிலும் வெளியிட நாங்கள் முயற்சிகள் மேற்கொண்டோம். ஆனால் அங்கு மற்ற பெரிய படங்களின் திரையீடுகள் இருந்ததாலும், போதிய திரையரங்குகள் கிடைக்காத சூழ்நிலை இருந்ததாலும் அந்த முயற்சியை ஒத்தி வைத்திருக்கின்றோம். முதலில் மலேசியவில் வெளியிட்டுவிட்டு பின்னர் ஒரு தேதியில் தமிழகத்தில் வெளியிடும் எண்ணத்தில் இருக்கின்றோம்” என்று தெரிவித்தார்.
படத்துக்கான செலவினம்
இதுவரை வெளிவந்த படங்களிலேயே அதிக செலவில் தயாரிக்கப்பட்ட படம் என்ற முத்திரையையும் மைந்தன் பெற்றிருக்கின்றது.
ஏறத்தாழ 6 இலட்சம் ரிங்கிட் திட்ட மதிப்பீட்டில் தயாரிக்கப்பட இருந்த மைந்தன், ஏறத்தாழ 9 இலட்சம் ரிங்கிட்டை தயாரிப்பு செலவினமாகக் கொண்டிருக்கின்றது. மேலும் ஒன்று அல்லது இரண்டு இலட்சங்கள் படத்தின் விளம்பரங்களுக்காக செலவிடப்பட இருப்பதாகவும் குமரேசன் இந்த நேர்காணலில் தெரிவித்தார்.
“சிறப்பான ஒரு படத்தைத் தரம் குறையாமல் தர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தான் செயல்பட்டதாலும் ஒரு திரைப்படத் தயாரிப்புக்குரிய எந்த அம்சத்திலும் தான் சமரசம் செய்து கொள்ளாமல், படத்தில் பணியாற்றிய சக கலைஞர்களுக்கு உரிய வசதிகளை செய்து கொடுத்து, தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டதாலும், செலவினங்கள் கூடியது உண்மைதான். ஆனால், அதே சமயத்தில் கூடுதல் நேரம் எடுத்து படப்பிடிப்பை விரைவாக நடத்திய காரணத்தால், ஏறத்தாழ 45 நாட்களில் இந்தப் படத்தை முடித்திருக்கின்றோம்” என்று குமரேசன் தெரிவித்தார்.
படத்தின் வண்ணப் படப் பிடிப்பு, திரையரங்கில் தெளிவாகவும், மேலும் சிறப்பாகவும் வெளிப்பட வேண்டும் என்ற நோக்கில், படத்திற்கு பிந்திய தொழில்நுட்ப மேம்படுத்தும் பணிகள் தமிழகத்தின் சென்னையில் நடைபெற்றிருக்கின்றன.
வசூல் ரீதியாக இந்தப் படம் வெற்றியடைந்தால், அதனைத் தொடர்ந்து தமிழ்ப் படங்களை வர்த்தக ரீதியாக உருவாக்கி வெற்றி பெறும் போக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதோடு வர்த்தக நிறுவனங்களும், தனியார்களும் உள்நாட்டு தமிழ்ப்படத் தயாரிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடும் ஆரோக்கியமான சூழலும் உருவாகும்.
இந்தப் படத்தின் கதாநாயகனும் இயக்குநருமான குமரேசன் மற்றும் அவருடன் நடித்த புன்னகைப்பூ கீதா, ஷைலா நாயர் ஆகியோரின் காணொளியுடன் கூடிய நேர்காணல்கள் தொடர்ந்து செல்லியலில் இடம்பெறும்.
-இரா.முத்தரசன்
‘மைந்தன்’ திரைப்படம் குறித்து இயக்குநர் குமரேசன் பேசும் காணொளியை கீழே காணலாம்:-