Home அவசியம் படிக்க வேண்டியவை “மஇகா தொகுதிகளுக்கு நிதிஉதவி இல்லையென்றால் கட்சி காலப்போக்கில் காணாமல் போகும்” –    டத்தோ ஹென்ரி...

“மஇகா தொகுதிகளுக்கு நிதிஉதவி இல்லையென்றால் கட்சி காலப்போக்கில் காணாமல் போகும்” –    டத்தோ ஹென்ரி எச்சரிக்கை

532
0
SHARE
Ad

Henryகோலாலம்பூர், 5 ஆகஸ்ட் – “பொருளாதாரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இந்த நவீன யுகத்தில், தங்களின் அரசியல், சமூகத் திட்டங்களை மேற்கொள்ள ம.இ.கா தொகுதிக் காங்கிரசுகள் நிதி உதவிகளோ, நிதி ஒதுக்கீட்டுத் திட்டங்களோ ஏதும் இல்லாமல் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன. இந்த அவல நிலை தொடர்ந்தால், நாளடைவில் மஇகாவின் அடித்தளமே சிதறுண்டு, காலப் போக்கில் கட்சி காணாமல் போகும்” என மஇகா மத்திய செயலவை உறுப்பினரும், பினாங்கு மாநில மஇகா தொடர்புக் குழுவின் பொருளாளரும்,  மஇகா பாகான் தொகுதி காங்கிரஸ் தலைவருமான டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம் எச்சரித்துள்ளார்.

எனவே, கட்சித் தலைமைத்துவம் இது குறித்து தீவிரமாக திட்டமிட வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ள டத்தோ ஹென்ரி ம..இகாவின் அடுத்த மத்திய செயலவைக் கூட்டத்தில் இது குறித்த தனது கருத்துக்களையும் திட்டங்களையும் முன்மொழிய இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

பத்திரிக்கைகளுக்கு விடுத்த அறிக்கையொன்றில், டத்தோ ஹென்ரி மேலும் தெரிவித்திருப்பதாவது:-

#TamilSchoolmychoice

MIC-Logo “இன்றைக்கு தேசிய முன்னணியில் மஇகா மூன்றாவது பெரிய கட்சி என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கின்றோம். ஆனால் அதற்கேற்ப தொகுதி காங்கிரஸ் நிலையில் நாம் திட்டங்களைச் செயல்படுத்துகின்றோமா என்றால் உண்மையில் இல்லை. காரணம், நிதிப் பற்றாக்குறை.

இன்றைக்கு எந்த ஒரு மஇகா தொகுதிக்கும் முறையான நிதி உதவியோ, நிதி ஒதுக்கீடோ இல்லை. எந்த ஒரு நிகழ்ச்சியை நடத்துவதென்றாலும், சமூகத் திட்டங்களை மேற்கொள்வது என்றாலும், நிதி இல்லாத குறையால் நாம் பிறரிடம் கையேந்தும் நிலைமைதான் உள்ளது. இல்லாவிட்டால், எதுவும் செய்யாமல் ஒதுங்கிக் கொள்ள நேரிடுகின்றது.

இதனால், கட்சியின் அடித்தளம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய செயலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், நான் நாடு முழுவதிலும் பல கூட்டங்களிலும், மாநிலப் பேராளர் மாநாடுகளிலும் கலந்து கொண்டு வந்துள்ளேன். இங்கு நான் சந்தித்த தொகுதிக் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் தெரிவித்த ஒருமித்த கருத்து, தொகுதி காங்கிரசுகள் நிதி ஒதுக்கீடு இல்லாமல் கஷ்டப்படுகின்றோம் என்பதுதான்.

அம்னோ, மசீச ஒப்பிட்டுப் பாருங்கள்

G.Palanivel, MIC Presidentஇன்றைக்கு அம்னோ வலுவாக இருக்கிறதென்றால், அதற்குக் காரணம் தொகுதி அளவில் யாராவது தலைவர்கள் அங்கு சட்டமன்ற உறுப்பினராகவோ நாடாளுமன்ற உறுப்பினராகவோ இருக்கின்றார்கள். அவர்கள் எல்லா அரசியல் விவகாரங்களையும் கவனித்துக் கொள்கின்றார்கள்.

போதாக் குறைக்கு, அம்னோவில் இருக்கும் பிரதமர், துணைப் பிரதமர் முதற்கொண்டு அமைச்சர்கள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் தொகுதிகளுக்கு நிதி உதவியோ, ஒதுக்கீடோ செய்து விடுகின்றார்கள். வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றார்கள்.

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக இல்லாத, அம்னோ தொகுதித் தலைவர்களுக்கு வருமானம் தரும் அரசு சார்பு பதவிகளும் கிடைக்கின்றது.

அதுமட்டுமில்லாமல், பூமிபுத்ரா அந்தஸ்து இருக்கின்ற காரணத்தால், பல அரசாங்கத் திட்டங்களிலும், வர்த்தக கூட்டு முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டு, வருமானத்தைப் பெற முடிகின்றது. அதன்வழி, தொகுதியையும் பலப்படுத்த முடிகின்றது.

மசீச, கெராக்கான் போன்ற கட்சிகளிலோ வலுவான பொருளாதார அடித்தளம் கொண்ட வர்த்தகப் பின்னணி கொண்டவர்கள்தான் தொகுதிகளில் தலைமைப் பொறுப்பிற்கு வருகின்றார்கள். இதனால், அவர்களுக்கும் பிரச்சனையில்லை. அப்படியே நன்கொடை என்றாலும், பொருளாதார பலம் கொண்ட சீன சமூகம் வாரி வழங்கி விடுகின்றது.

மசீச கட்சிக்கு இருக்கும் பலமாடி கட்டிட தலைமையகம், ஸ்டார் பத்திரிக்கை, துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரி, மற்றும் பல தொழில் துறை முதலீடுகளால், ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரிங்கிட் வருமானம் கிடைக்கின்றது.

அதனைக் கொண்டு மசீச தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு, தொகுதிகள் பலப்படுத்தப்படுகின்றன.

ஆனால், ம.இ.கா தொகுதிகளின் நிலைமை பரிதாபம்தான். நமது கட்சியில் அரசியல் ரீதியாக தொகுதிகளின் பொறுப்புகளுக்கு வரும் தலைவர்கள், பொருளாதாரத்தில் வலுவுள்ளவர்கள் இல்லை. எனவே, ஒவ்வொரு முறையும், எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் பிறரிடம் கையேந்தி நன்கொடை கேட்க வேண்டியிருக்கின்றது.

நமக்கு, நிரந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளும் இல்லை. நமக்கென்று வருமானம் தரக்கூடிய அரசு பதவிகள் இல்லை. பெரும்பாலான நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகள் தற்போது எதிர்க்கட்சிகள் வசம் இருப்பதால், அவர்களிடம் சென்றும் உதவி கேட்க முடியாத நிலை.

தேசிய முன்னணி பிரதிநிதிகள் இருந்தால் மட்டுமே நாம் நிதி ஒதுக்கீடு எதனையாவது பெற முடியும்.

ஏய்ம்ஸ்ட், டேஃப் கல்லூரி வருமானம் எங்கே?

Dr-S.-Subramaniamமசீசவுக்கு துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரி, பல்கலைக் கழகம் மூலமாக மட்டும் கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கின்றது. ஆனால், நமது மஇகா கிளைகள் தெருத் தெருவாக சென்று வசூலித்தும், அரசாங்கம் இந்தியர்களுக்கென, நமது கட்சிக்கென ஒதுக்கிய நிதி உதவியில் இருந்தும் கட்டப்பட்ட ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகமும், டேஃப் கல்லூரியும் இன்றைக்கு நன்றாக இயங்குகின்றன. பல மில்லியன் ரிங்கிட் வருமானமும் கொண்டுள்ளன.

ஆனால், இவை மூலம் ஏதாவது பணம் ம.இ.காவுக்கு ஆண்டுதோறும் ஒதுக்கப்படுகின்றதா?

அப்படி ஒதுக்கினால், ஆண்டுதோறும் மஇகாவுக்கு கணிசமான தொகை கிடைக்கும் என்பதோடு, அந்தப் பணத்தை தொகுதிகளுக்கு அவர்களின் கிளைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரித்துக் கொடுத்தால், அதன்மூலம் தொகுதிகள் தங்களின் உள்வட்டாரங்களில் இந்தியர்களுக்கு நிறைய செய்ய முடியும்.

கூடுதலாக, இப்போது இருக்கும் இரண்டு அமைச்சர்களும், அரசாங்கத்தில் பேசி ஆண்டு தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை மான்யமாகப் பெற வேண்டும். அதை தொகுதிக் காங்கிரசுகளுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.

அப்போதுதான், தொகுதிகள் பலமாக, துடிப்புடன் இயங்க முடியும். நமது கட்சியின் வேர்களாக தொகுதிகளும், கிளைகளும் பலப்படுத்தப்பட்டால்தான் கட்சியும் பலப்படும். இந்த வேர்களுக்கு நீர் பாய்ச்சுவது போல நிதி உதவிகளைப் பாய்ச்சினால்தான், இவை உறுதியுடனும் வலுவுடனும் திகழும். கட்சியும் நிலைத்திருக்கும்.

அப்போதுதான், அடுத்த பொதுத் தேர்தலில் இந்திய வாக்குகளைக் கவர்வது குறித்தும் நாம் சிந்திக்க முடியும்.

இல்லாவிட்டால், காலப்போக்கில் இந்த நிதிப் பிரச்சனையால், தொகுதி காங்கிரசுகள் சோர்வு கொண்டு வலுவிழந்து, அதனால் கட்சியே காணாமல் போய்விடும்.”

-இவ்வாறு தனது அறிக்கையில் டத்தோ ஹென்ரி கூறியுள்ளார்.