ஜெனிவா , ஆகஸ்ட் 9 – ஆப்பிரிக்க நாடுகளில் கடும் உயிரிழப்பை ஏற்படுத்தி வரும் எபோலா நோயை உலகப் பேரழிவு நோயாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், உலக அளவில் வேகமாக பரவி வரும் எபோலா வைரஸை கட்டுபடுத்துவது குறித்து உலக சுகாதார அமைப்பின் இரண்டு நாள் அவசரக் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில், உலக அளவில் எபோலா வைரஸின் தாக்கத்தினால் இதுவரை 1000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், அந்த நோய் பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் உலகளாவிய சுற்றுப்பயணத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் மார்கரெட் சான் கூறியுள்ளதாவது:- “எபோலா வைரஸ் தொற்று, கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது.
இந்நோய் தாக்குதலுக்கு ஆளாகி மக்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சர்வதேச உதவிகள் தேவைப் படுகின்றன” என்று கூறியுள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இந்நோய் தொற்று மிகக் கடுமையாக பரவுவதால் அறுபதுக்கும் மேற்பட்ட பகுதிகளில் இந்த கொடிய நோய் உக்கிரம் அடைந்துள்ளதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளானர்.
கடுமையான காய்ச்சல், கட்டுக்கடங்காத ரத்தக் கசிவு போன்றவற்றை ஏற்படுத்தும் இந்த நோய் தாக்குதலுக்கு மேற்கு ஆப்பிரிக்காவின் கயானாவில் மட்டும் 932 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.