கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 – அண்மையில் நாடெங்கிலும் திரையிடப்பட்ட மலேசியப் படமான ‘மைந்தன்’ மாபெரும் வெற்றியடைந்ததோடு, கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 500,000 ரிங்கிட் வசூலை பெற்று புதிய சாதனையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அப்படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. காரணம் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘அஞ்சான்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 -ம் தேதி மலேசியா முழுவதும் திரையிடப்படவிருப்பதால், ‘மைந்தன்’ திரையிடப்படுவதை இன்றோடு நிறுத்திக் கொள்ளப்போவதாக திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த செய்தி ‘மைந்தன்’ படக்குழுவினரை மட்டுமல்லாமல், மலேசிய ரசிகர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அண்மையில் வெளியிடப்பட்ட சில தரமான மலேசியப் படங்கள், மக்களிடையே உள்ளூர் படங்களின் மீது இருந்த தவறான கண்ணோட்டத்தை மாற்றி புதிய நம்பிக்கையை விதைத்தது. அந்த நிலையை ஏற்படுத்த அதற்கு பின்புலமாக இருந்த மலேசியக் கலைஞர்களின் கடும் உழைப்பு மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
இதுவரை உலக அளவில் தமிழ் படங்கள் என்றால் அது தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் படங்கள் தான் என்ற நிலை மாறி அதற்கு நிகராக, நல்ல கதையம்சம், துல்லிய ஒளிப்பதிவு, சிறந்த நடிப்பு கொண்ட மலேசியப் படங்களும் வெளிவந்து மக்களை ஈர்க்கத் தொடங்கின.
அதற்கு உதாரணமாக வெண்ணிற இரவுகள், வெட்டிபசங்க, மெல்லத் திறந்தது கதவு போன்ற திரைப்படங்களைக் கூறலாம். வெண்ணிற இரவுகள் திரைப்படம் நோர்வே உலகத் திரைப்பட விழா, சென்னை திரைப்பட விழா என கடல் கடந்து வெளிநாடுகளிலும் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டு பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பிரபல இயக்குநர்களின் பாராட்டுகளைப் பெற்றது.
பிரம்மாண்ட செலவில் உருவாக்கப்பட்ட ‘மைந்தன்’
அந்த வகையில், சுமார் 9 லட்சம் ரிங்கிட் பொருட்செலவில், மலேசியக் கலைஞர்களின் கடும் உழைப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகப்பட்ட ‘மைந்தன்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 7 -ம் தேதி நாடெங்கிலும் 34 திரையரங்குகளில் திரையடப்பட்டு மக்களால் மிகவும் விரும்பப்பட்டது.
படம் வெளியிட்ட பெரும்பாலான திரையரங்குகளில் மக்கள் திரளாக சென்று படம் பார்த்து ரசித்து வரும் இவ்வேளையில், ‘மைந்தன்’ திரைப்படத்தை திரையிடாமல் நிறுத்துவது அப்படக் குழுவினருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துவதோடு, தரமான மலேசியப் படங்கள் மக்களிடையே சரியாக போய் சேராத நிலை ஏற்படும்.
இது குறித்து ‘மைந்தன்’ படக்குழுவினர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அஞ்சான்’ வெளியாவதால் ‘மைந்தன்’ திரைப்படம் திரையிடுவதை நாளையோடு நிறுத்திக் கொள்வதாக திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். ‘மைந்தன்’ வெளியிடப்பட்ட பெரும்பாலான திரையரங்குகள் ‘ஹவுஸ் புல்’ ஆக இருந்த போதிலும், அப்படத்தை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இதற்கு மக்கள் தான் ஒரு தீர்வு சொல்ல வேண்டும். மக்கள் தான் ‘மைந்தன்’ திரைப்படத்தை திரையிடும் படி திரையரங்குகளுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்று தங்களது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
எதிர்காலத்தில் மலேசியப் படங்களின் நிலை?
எதிர்காலத்தில் மலேசியப் படங்களுக்கு இது போன்ற நிலை ஏற்படக்கூடாது என்றால் நிச்சயமாக திரையரங்கு உரிமையாளர்களின் பேராதரவு தேவைப்படுகின்றது.
தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு மலேசியாவிலும் தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத ஒன்று. அதே வேளையில் மலேசியப் படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களும் இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். அவர்களையும் திரையரங்கு உரிமையாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
‘அஞ்சான்’ வெளியிடப்படும் திரையரங்குகளில், மலேசிய ரசிகர்களுக்கும் முக்கியத்துவம் அளித்து, ‘மைந்தன்’ திரைப்படத்திற்கு குறைந்தது ஒன்றிரண்டு அரங்குகளையாவது ஒதுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
– செல்லியல் ஆசிரியர் குழு