Home நாடு பக்காத்தான் ராயாட் வான் அசிசாவை மட்டுமே முன்மொழியும் – அஸ்மின் விலகல்

பக்காத்தான் ராயாட் வான் அசிசாவை மட்டுமே முன்மொழியும் – அஸ்மின் விலகல்

634
0
SHARE
Ad

Wan Azizah Wan Ismailகோலாலம்பூர், ஆகஸ்ட் 17 – பிகேஆர் கட்சி வான் அசிசாவை மட்டுமே சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு முன் மொழிந்துள்ள காரணத்தால் கட்சிக் கட்டுப்பாடு கருதி தான் பாஸ் கட்சியின் முன்மொழிதலை ஏற்கவில்லை என பிகேஆர் கட்சியின் அஸ்மின் அலி அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வான் அசிசாவை  மட்டுமே பக்காத்தான் ராயாட் என்ற மக்கள் கூட்டணி சிலாங்கூர் மந்திரி பெசாராக முன் மொழியும் என மக்கள் கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று அறிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற மக்கள் கூட்டணியின் தலைவர்கள் சந்திப்பிற்குப் பின்னர் அன்வார் இப்ராகிம் இந்த அறிவிப்பைச் செய்தார்.

#TamilSchoolmychoice

மக்கள் கூட்டணி தலைவர்களுக்கான கூட்டத்தில் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் மாட் சாபு மற்றும் ஜசெக தலைவர் லிம் கிட் சியாங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதற்கு முன்பாக, இன்று பாஸ் கட்சி தனது உச்சமன்றக் கூட்டம் முடிந்தவுடன் சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு, வான் அசிசா மற்றும் அஸ்மின் அலி ஆகிய இருவரது பெயர்களையும் முன் மொழிந்திருந்தது.

ஆனால், அஸ்மின் அலியோ, கட்சியின் தலைமைத்துவம் ஏற்கனவே வான் அசிசாவை மந்திரி பெசாராக முன்மொழிந்திருப்பதால், தான் பாஸ் கட்சியின் முன்மொழிதலை ஏற்கப் போவதில்லை என அறிவித்தார்.

கட்சியின் துணைத் தலைவர் என்ற முறையில் கட்சியின் கட்டுப்பாட்டிற்கு தான் மதிப்பளிப்பதாகவும், அதே வேளையில், சிலாங்கூர் சுல்தான் அரண்மனைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் சத்தியப் பிரமாண ஆவணத்தில் தான் கையெழுத்திட்டிருப்பதாலும், தான் சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கான நியமனத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் அஸ்மின் அலி அறிவித்துள்ளார்.

சிலாங்கூர் மாநிலத்தில் மக்கள் கூட்டணியின் ஆட்சியைத் தற்காப்பது தனது கடமை என்றும் அஸ்மின் அலி கூறியுள்ளார்.

அவரது இந்த அறிவிப்பு மூலம், தற்போது மக்கள் கூட்டணி ஒரே ஒரு வேட்பாளரை மட்டும் – வான் அசிசாவை மட்டும் – காலிட் இப்ராகிமிற்கு பதிலாக புதிய மந்திரி பெசாராக சிலாங்கூர் சுல்தானிடம் முன்மொழியும் என அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.