கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – எம்எச்17 விமானப் பேரிடரில் அடையாளம் காணப்பட்ட 21 மலேசியப் பயணிகளின் சடலங்கள் வரும் வியாழக்கிழமை ஆம்ஸ்டெர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு கொண்டு வரவுள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் டத்தோ வீ கா சியாங் தெரிவித்தார்.
இது குறித்து வீ நேற்று வெளியிட்ட அறிக்கையில், “சவப்பெட்டிகளில் 18 பேரின் சடலங்களும், 3 தாழிகளில் சிதைந்த சடலங்களின் எஞ்சியுள்ள பாகங்களும், வியாழக்கிழமை மதியம் சீபோல் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கொண்டு வரப்படவுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
மலேசியர்களின் சடலங்களை கொண்டு வர நெதர்லாந்திலுள்ள மலேசிய அதிகாரிகள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், முதல் விமானத்தில் மேலும் ஒரு சடலத்தை வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வீ தெரிவித்தார்.
இதனிடையே மேலும் இரு மலேசியர்களின் சடலங்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.