பெய்ஜிங், ஆகஸ்ட் 20 – போதைப் பொருள் வைத்திருந்ததற்காக சீனாவில் கைது செய்யப்பட்டுள்ள தனது மகனைக் காண பிரபல நடிகர் ஜாக்கி சான் பெய்ஜிங் நகருக்கு நேற்று சென்றுள்ளார்.
ஜாக்கி சானின் மகனான ஜெய்சி சான் 100 கிராமுக்கும் அதிகமான மரிஜுவானா என்ற வகை போதைப் பொருளை வைத்திருந்தார் என்ற குற்றத்திற்காக, கடந்த திங்கட்கிழமை பெய்ஜிங் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவருடன் தைவான் நடிகர் கைகோவும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஜெய்சி சானின் சார்பாக அவரது பிரதிநிதி, ஜெய்சி சானை காண அவரது தந்தை ஜாக்கி சான் பெய்ஜிங் நகருக்கு வருகின்றார் என்று தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
இந்த தகவலை ஹாங்காங் நாட்டின் பிரபல ஆங்கில நாளிதழான சவுத் சீனா மார்னிங் போஸ்ட் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜெய்சி சான் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், போதைப் பொருளை பயன்படுத்தியதற்காகவும், பிறருக்கு அப்பொருளை வைக்க இடமளித்ததற்காகவும் சீனா சட்டப்படி அவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.
இந்த ஆண்டு மட்டும் சீனா காவல்துறை 9 பிரபலங்களை போதைப் பொருள் வழக்கில் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2009 -ம் ஆண்டு, போதை பொருளுக்கு எதிரான போராட்டத்திற்கு தூதுவராக சீன அரசாங்கத்தால் ஜாக்கி சான் நியமிக்கப்பட்டார்.
அப்போது, தனது மகன் எப்போதாவது தவறான வழிக்கு சென்றால், நிச்சயம் அவர் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் காவல்துறையிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இருதலைக் கொள்ளி எறுப்பாக தவிக்கும் ஜாக்கி சான் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மகனை விடுவிக்க உதவப் போகிறாரா? அல்லது சீனாவின் போதைப் பொருள் ஒழிப்பின் தூதுவராக நடந்து கொள்ளப் போகிறாரா? என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.